Difference between revisions of "இந்திரஜித்தின் ”விரித்த கூந்தல்” - நீரினூடே துலங்கும் முகங்கள்"

From HORTS 1993
Jump to navigation Jump to search
All>Anandabhay
(Created page with "கிராமத்தில் தலைக்கு குளித்துவிட்டு, நுனி ஈரம் சொட்டும் விரித்த...")
 
m (1 revision imported)
 
(One intermediate revision by one other user not shown)
(No difference)

Latest revision as of 00:08, 14 March 2020

கிராமத்தில் தலைக்கு குளித்துவிட்டு, நுனி ஈரம் சொட்டும் விரித்த கூந்தலை ஒருபுறம் தலைசாய்த்து தொங்கவிட்டு, மொட்டை மாடியிலோ, வீட்டு வெளியிலோ தலைதுவட்டும்/மைகோதியினால் நீவி உலர்த்திக் கொண்டிருக்கும் அக்காக்களைப் பார்ப்பது அந்த சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் (இப்போதும் பிடிக்கும் என்று உண்மையை எழுதிவைக்கலாமா?!).

இந்திரஜித்தின் “விரித்த கூந்தல்” அந்தச் சிறுபிராயத்து கிராமத்து நினைவுகளின் அலைகளை உண்டாக்கியது. எதிர் வரிசையின் ராஜி அக்கா, அடுத்த தெருவின் பாக்கியம் அக்கா, பெரியப்பா வீட்டில் அமுதா அக்கா...சென்னம்பட்டி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் உடன்படித்த மாமா பெண் (மாமா பள்ளியில் தமிழ் வாத்தியார்) விஜயராணி...இன்னும் பலரை நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து மேலெழுப்பியது. விஜயராணியை திருமணத்திற்குப் பிறகு ஒருமுறை கிராமத்திற்குச் சென்றபோது சந்தித்த அந்தநாள் இன்னும் பசுமையாய் நினைவில் எழுந்தது. வெள்ளிக்கிழமை, ஊர் எல்லையிலிருக்கும் நொண்டிக் கருப்பன்ணசாமி கோவிலுக்குச் செல்லும்போது மந்தையில் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்துவிட்டு ”அட...வெங்கடேஷா...எப்ப வந்த...என்னத் தெரியுதா?” என்று வாய் நிறையச் சிரிப்புடன் கேட்டது. எனக்கு உண்மையில் அடையாளம் தெரியவில்லை; நல்லவேளை, பாட்டி உள்ளிருந்து வந்து “வாம்மா...விஜயராணி...உள்ள வா” என்று அழைக்க வீட்டுக்குள் சென்று, பழைய பள்ளிக் கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். ராணி கழுத்து நிறைய நகைகள் போட்டிருந்தது. பள்ளி நாட்களில் எனக்குப் பிடித்த ராணியின் தெற்றுப்பல் இப்போது காணவில்லை. தலைமுடியை விரித்துவிட்டு, நுனியில் சிறுமுடிச்சிட்டு, மல்லிகைப்பூ வைத்திருந்தது. ராணியின் அப்பாதான் எனக்கு பள்ளியில் நடக்கும் பேச்சு போட்டிகளுக்கு கட்டுரை எழுதித் தருவார். பேச்சினிடையே விரித்த கூந்தலை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டது. பேச்சு முழுவதிலும் விரித்த கூந்தலின் நுனியை விரல்களால் பின்னிக் கொண்டேயிருந்தது.

”இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது” - இந்திரஜித்தின் “விரித்த கூந்தல்” சிறுகதையின் ஆரம்ப முதல் வரி, என்னை ஆச்சர்யப்படுத்தி உள்ளிழுத்தது. கதைசொல்லி நண்பனோடு அருவிக்குச் செல்கிறான். விரித்த கூந்தலோடு அத்தனை பெண்களை பார்க்க, அவன் மனது தொந்தரவடைகிறது. விரித்த கூந்தல் அவன் மனதில் ஏனோ பெண்ணின் சினத்தின்/பிடிவாதத்தின் குறியீடாக பதிந்துபோயிருக்கிறது. அவன் சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளும் நினைவுகளும் அதற்கு வலுசேர்த்திருக்கின்றன. #பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள் என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள்#.

”நவீன இலக்கியத்தின் முக்கியமான அழகியல்மரபான இயல்புவாதத்தின் அடிப்படை அலகான “சுருக்கவாதம்” கையாண்ட எழுத்தாளர்களின் வரிசையில் வரக்கூடியவர் இந்திரஜித்” என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். கதையில் நண்பன் நினைப்பது #”நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.”# . நண்பரைப் போலவே கதைசொல்லியின் வரிகள் முதல்முறை வாசித்தபோது எனக்கும் புரிந்தும் புரியாதது போலவே தோன்றியது. இரண்டாம் வாசிப்பில்தான் ஓரளவிற்கு புரிந்தது.

  1. அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது#
  1. அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள் # - என்று நண்பனிடம் சொல்கிறான்.

இயல்பான காமத்தை காலந்தோறும் விதம்விதமாய் இலக்கியம் பதிவுசெய்துகொண்டுதானிருக்கிறது. காதலும், அழகின் தரிசன மனவெழுச்சியும் எந்த மென் புள்ளியில்/கோட்டிற்கு அப்பால், காமத்தைத் தொடுகிறது என்பது இன்னும் பலரும் அறியாத புதிராகத்தானிருக்கிறது.

ஒரே ஒருவர் மட்டுமே நிற்கமுடியும் சிறிய அருவியில் பெண்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து நனைந்து வெளியேறுகிறார்கள். ”விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன” - கதைசொல்லியின் இந்தவரி அவன் மனநிலையை பிரதிபலிப்பதாய்...

எனக்கு இந்த வரியைப் படித்ததும் வசந்தா அத்தைதான் ஞாபகம் வந்தார். வசந்தா அத்தையை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் கிராமத்தின் ஒரு பணக்கார வீட்டுக் குடும்பத்தின், மூன்று ஆண்களுக்கு நடுவில் பிறந்த செல்லப்பெண். கிராமத்தில் முதல் டிவி அவர்கள் வீட்டில்தான் வாங்கினார்கள். வசந்தா அத்தை ஏனோ கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. கள்ளிக்குடி பள்ளியில் தையல் டீச்சராக வேலை பார்த்தார். நான் எட்டாம் வகுப்பு முடித்து, திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கு விடுதியில் சேர்ந்தபோது, விடுதிக்குச் செல்லுமுன் முந்தைய நாள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றிருந்தேன். அந்த நாள்...தலைக்கு குளித்துவிட்டு, கூந்தலை விரித்துப்போட்டு வாசலில் உட்கார்ந்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் சென்று விஷயம் சொன்னதும் என்னைக் கைபிடித்து பூஜை அறைக்கு கூட்டிப்போய் நெற்றியில் விபூதி பூசி, கையில் பணம் தந்து, “நல்லாப் படிக்கணும்” என்று ஆசீர்வதித்தார்கள். புது இடத்திற்கு போவதாலோ, முதன்முதலாய் வீட்டை விட்டு பிரிந்திருக்கப் போவதாலோ, என்னவோ தெரியவில்லை, அந்தச் சூழ்நிலையில் வசந்தா அத்தையின் சாமி படங்கள் நிறைந்த அந்த பூஜை அறையில் எனக்கு அழுகை வந்தது. ​ கதை முழுதும் படிக்கும்போது, விரித்த கூந்தல் மனதில் வந்துகொண்டேதானிருந்தது (கதை சொல்லி உணர்வதைப் போலவே). விரித்த கூந்தல்கள் நின்​றுகொண்டிருக்கின்றன; உட்கார்ந்திருக்கின்றன; நடந்துகொண்டிருக்கின்றன ​ #வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர்#. விரித்த கூந்தல் அவன் ஆழ்மனதில் அவனறியாமல் பதிந்துபோயிருக்கிறது. விரித்த கூந்தல், திரௌபதியினால்தான் தன் மனதை தொந்தரவு செய்வதாகவும், வேறு நாட்டவருக்கு இது ஒன்றும் செய்யப்போவதில்லை என்றும் ஆசுவாசம் கொள்கிறான். ஆனால் இறுதியில் அருவியிலிருந்து திரும்பும்போது, ரோட்டில் முன்பு பார்த்த மனநிலை சரியில்லாத அலங்கோலமான ஆடைகள் அணிந்த இளம்பெண் தேருக்கு எதிர்ப்புறம் திருமண மண்டபத்திலிருந்து வரும் நாதஸ்வர இசைக்கு திருமண மேடையில் அமரும் மணப்பெண்ணைப் போல அமர்ந்திருக்கும் காட்சியைக்கண்டு அவன் மனதில் மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.

அ.ராமசாமி எழுதியதுபோல், இனிமேல் அருவிக்குச் செல்லும் சமயங்களிலெல்லாம், இந்திரஜித்தின் “விரித்த கூந்தல்”-ம் சேர்ந்தே வரும் என்றுதான் நினைக்கிறேன்.