அம்பேத்கர்

From HORTS 1993
Jump to navigation Jump to search
Aad0145b55387166f49adc734102635b.png

நண்பர்களே! இந்த (April 14) சித்திரை திருநாள் மட்டுமல்லாது..என்னை போன்றவர்களுக்கு இன்னுமொரு சிறப்பான நாள் கோடானு கோடி...ஒடுக்கப்பட்ட மக்களை... அடிமை விலங்கில் இருந்து மீட்டெடுத்த...மீட்பர்..."அண்ணல் அம்பேத்கர்"அவதரித்த தினம் இன்று! மனிதர்கள் மட்டுமே பிறக்கிறார்கள்.....அவதார புருஷர்கள்..பாவிகளை மீட்டெடுக்க என்றும் அவதரிக்க மட்டுமே செய்கிறார்கள்....என் பார்வையில் அப்படி ஒரு அவதார புருஷன் அவதரித்த தினம் இன்று.


வனவாசம் என்பது 14ஆண்டு காலம் என்று இராமாயணம் குறிப்பிடுகிறது..ஆனாலும் இப்படி பதினான்கு...பதினான்கு என்று பல பதினான்கு ஆண்டுகளை அடிமைகளாய் கடந்து விட்ட ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தின் இரட்சகராக ஒரு குடும்பத்தின் 14 வது குழந்தையாக இதே 14ம் நாள் ஒரு ஏசுவை போல, ஒரு புத்தனை போல, ஒரு மஹாவீரரை போல,ஒரு நபிகள் நாயகம் போல அந்த குழந்தை அவதரித்தது. இந்த தேசத்தில்....தோன்றியது இல்லாது.... அந்த குழந்தை வேறு எந்த தவறையும் செய்து விட வில்லை....! ஆனாலும் அக்டோபஸின் கொடிய கரங்களை போல...சாதீய கொடுமைகளின் கரங்களில்...அந்த பிஞ்சு குழந்தையின் குரல் வலை நெறிக்கப்பட்டது. திரும்புகிற திசைகள் எல்லாம் அந்த குழந்தைக்கு சாதி எனும் சதியின் சவுக்கடிகள்.


ஏன் தங்களை மட்டுமே எல்லோரும் விரட்டுகிறார்கள்....நாம் என்ன தவறு செய்து விட்டோம்....தவிக்கிற வாய்களுக்கு....தண்ணீரை தொடக்கூட தகுதி இல்லையா....தான் தொட்டு விட்டால்...இன்னொருவன் புனிதம் கெட்டுப் போகுமா??? ஒன்றுமே புரியவில்லை அந்த பிஞ்சு குழந்தைக்கு!


நாட்டில் உள்ள எல்லோருமே ஆங்கிலேயருக்கு அடிமை பட்டு கிடக்கிறார்கள்....இந்த அடிமைகளுக்கு அடிமைகளாக இந்த நாட்டிலேயே இன்னுமொரு அடிமை கூட்டம். இதை விதி என்பதா...சதி என்பதா...நீரு பூத்த நெருப்பாயிற்று அவனுக்கு! கையிலே பொருள் இல்லை...உடலிலே பலம் இல்லை...நின்று போராட தன் மக்களுக்கு திராணியும் இல்லை.... பின் எதை கொண்டு போராடுவது! இந்த இன்னுமொரு அடிமைகளின் சுதந்திர போராட்டம் கத்தியால் வெல்ல முடியாது...அது புத்தியால் மட்டுமே சாத்தியம் என்ற தாரக மந்திரம் அந்த பிஞ்சு உள்ளத்தில் ஒரு விதையாய் விழுகிறது....! கருணை உள்ளம் கொண்ட... கொடையாளிகளிடம்...கை ஏந்தி....பிச்சை வாங்கி திரை கடல் ஓடியது.....ஆனால் திரவியம் தேடவில்லை... தன் புத்தியை மட்டும் தீட்டியது அந்த குழந்தை! அடிமைத்தனத்திலேயே....உறைந்து போய்....உறங்கி கொண்டிருக்கும்....தன் சமுதாயத்தில் தானும் உறங்கிப் போனால்....இவர்கள் நிரந்தரமாக உறங்கிப்போவார்கள்...பின் இவர்களுக்கு விடியல் என்பது வெறும் கனவு மட்டுமே என்பதால்....தன் உறக்கத்தை தள்ளி வைத்து ஒவ்வொரு நாளின் பெரும் பாகத்தை....பகலென்றும் இரவென்றும் படித்துக்கொண்டே விழித்திருந்தது இந்த விடி வெள்ளி! அன்று அவன் பட்டங்கள் பெற்றதை பட்டியல் இட்டிருந்தால்...அகில உலகமே அவனை...அள்ளிக்கொண்டு போயிருக்கும்! மேலை நாட்டு கரன்சிகளால்.... மெத்தை போட்டு....காலையும்...மாலையும் ஆடி ப் பாடி ஆனந்தமாய் தன் வாழ் நாளை அவன் வாழ்ந்து கழித்திருக்கலாம்!

ஆனால் அவனோ அத்தனையும் விட்டெறிந்து தாய் நாடு திரும்பி.....உண்மையிலே தாழ்உற்று அடிமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு...பாழ் பட்டு நின்ற ஒரு பாவப்பட்ட ஊமைகளின் கூட்டத்தின்...தன்னிகரில்லா தலைவனாக.... அவர்களின் மனசாட்சியாக....அவர்களின் உரிமை குரலாக....காண்டீபம் எழுக என்பது போல விஸ்வ ரூபம் கொண்டு எழுந்து நின்றான்! அவர்களை உறக்கத்தில் இருந்து எழும்ப வைத்தான்....படிக்க வைத்தான்...பண்பட வைத்தான்...! நாடு சுதந்திரத்துக்கு போராடிக்கொண்டிருந்தது....ஆனால் இவனோ சொந்த நாட்டின் அடிமைகளுக்கு இன்னுமொரு சுதந்திரம் வேண்டி....தனிப் பெரும் போராளியாக போராடிக் கொண்டிருந்தான்!


நாட்டின் ஆனந்த சுதந்திரம் ....ஆயிரம் பேர்களால் ஆயிற்று .! ஆனால்...இந்த சுதந்திர நாட்டின் அடிமைகளின் சுதந்திரம்...இவன் ஒருவனாலேயே ஆயிற்று!


நண்பர்களே..!

இன்றோ....நாளையோ....இன்னுமொரு நாளிலோ..... அவன் சிலைகள் சிதைக்கப் படலாம்....அழுகிய முட்டைகள் வீசப்படலாம்...சேறும்....சகதியும் கொண்டு பூசி மறைக்கப்படலாம் இவ்வளவு ஏன்.....செருப்பு மாலைகள் இட்டு கூட அவன் பெருமையை பெயர்த்து விட்டதாக பேசிக்கொள்ளலாம். ஆனாலும்......இந்த நாட்டில்....அடிமைகளின் வரலாறு என்பது இருக்கும் வரை....அந்த அடிமைத் தனத்தின் முடிவுரை எழுத முனைந்தவன் என்பதால் "இந்த நாட்டின் அடிமைகளின் அரசன் அண்ணல் அம்பேத்கர்" என்று காலம் என்றும் அவன் பெயரை வாய் விட்டு உரக்க உச்சரித்துக் கொண்டே தான் இருக்கும்!

🙏