என்னவளும், எழுபது நாட்களும்

From HORTS 1993
Jump to navigation Jump to search


என்னவளும், எழுபது நாட்களும்

கண்ணே !

WhatsApp Image 2020-06-06 at 2.39.27 PM.jpeg

ஏனோ.... தானோ....என்று தான் உன்னை கரம் பிடித்தேன்!

இந்த கலியுக காலத்திலும் தேனிலவு போகாமல் ....பால் பழம் உண்ணாமல்.... வாழ்க்கை பயணத்தை தொடங்கிய..... முதல் தலைமுறை....தம்பதியர் நாமாகத்தான் இருப்போம்!?

உன்னை என் தாரம் என்று எண்ணிய நாட்களை விட தூரம் என்று தள்ளி நின்ற நாட்களே அதிகம் என்று நினைக்கிறேன்.... !

அது ஏனோ அந்த மணக் கணக்கு மட்டும் இன்னமும் எனக்கு விளங்கவே இல்லை....!

நீயும்....இராமனாலும் புரிந்து கொள்ள முடியாத சீதையாய்.....வாழ்ந்து விட்டுருந்தாய்....!

அவளோ...மாலையிட்ட கையோடு அவனோடு....வனவாசத்திற்கும்...சேர்ந்தே போனாள்....! நீயோ...மனம் மாறி... மிதிலை...விட்டு என்னோடு....வரவே... நான் பத்தாண்டு...காத்திருந்தேன் !

கண்ணிக்கிட்டால்....கணக்கில்லா வருடங்கள்....உருண்டுத்தான்....ஓடியிருக்கின்றன! ஆனால் வாழ்ந்ததென்னவோ.....சில நாட்களுக்குள் அடங்கிப்போயிருக்கும்!

எனக்கு....நான் வாழ நினைத்த கனவு வாழ்க்கை ஒன்று இருந்தது! என் கனவு வாழ்க்கை..... விடியல் காணா...இரவாகவே இருந்தது!

ஆனால் அந்த கனவு வாழ்வின் அத்தியாயத்தை ..... ஒரு கண்ணுக்கு தெரியாத .... ஒரு (கொரோனா) வைரஸ் எனக்கு பிச்சையிட்டு போகும் என்று என் கற்பனையிலும் எண்ணவில்லை கண்ணே!

ஒரே நாளில்...என் வாழ்க்கையில்...தென்றல் ...தானே வந்தென்னை...தழுவிக்கொள்ளும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை!

கொரோனா வின் கட்டுக்குள்.... உன்னோடு அந்த கூட்டுக்குள்.... வாழ்ந்து விட்ட அந்த எழுபது நாட்கள் ஒரு தேன் நிலவின் அற்புதங்கள்...! என்னுள் நீ....உன்னுள் நானாய்....

அதன் ஒவ்வொரு

விடியலின் போதும் என் கன்னத்தில் அறைந்து சொன்னாய்.... "தாரமல்ல நான் உனக்கு.... ஒரு தாய் என்பதே என் கணக்கு! இந்த எழுபது நாட்கள் தான் உண்மையில் நான் வாழ்ந்திருக்கிறேன் அன்பே !

கொரோனாவால் ....கண்டங்கள் பிரிந்தன .... நாடுகள் நிர்மூலமாயின .... மனிதனை பார்த்து மனிதனே விலகி... விலகி.... ஓடினான் ....! ஆனாலும் ஆச்சர்யம் பார் கண்ணே... விலகி இருந்த நீயும்....நானும் மட்டும் அன்பால் இணைந்தோம்....!

யார் யாருக்கோ எமனின் பாசக்கயிற்றை வீசி பதம் பார்த்த கொரோனா உன்னையும் என்னையும் என்றைக்கும் விலகாத பாசக்கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டது....!

ஈருடல்....ஓருயிர் என்பதெல்லாம்.... இலக்கியம் பேச நன்றாய் தான் இருக்கும்.... இல்லறத்திற்கு பொருந்தாது... என்று வீராப்பு பேசிய நானே .... அது உண்மையென....... உள்ளத்தால் உணர்ந்தேன்.... நான் உண்மையாய் வாழ்ந்த இந்த ஊரடங்கு நாட்களில்!

உன்னை பிரிந்து வாழ்ந்த அந்த நாட்களில் எல்லாம்...எப்போதோ ஒரு முறை தான் என் நினைவுகளை தொட்டுப்போவாய்... இப்போது நிஜம் என்பது நீ மட்டுமே என்று உள்ளத்தில் உறைந்தே போனாய் கண்ணே!

இதோ கடைமையின் கட்டாயத்தில்....புறப்படும் நேரம் வந்தாயிற்று...உன்னை பற்றி இருக்கும் என் கைகள் மெல்ல விலகுகின்றன....நாளை காலை...சூரியன் நம் முற்றத்தை முத்தமிடும் முன்பே உன்னிடம் கண்ணில் கசியும் ஒரு துளி கண்ணீர் மூலம்...போய் வருகிறேன் என்று விடை பெற்று இருப்பேன்....!

அலுவலகத்திற்குத்தான் போகிறேன் ....போர்களத்திற்கல்ல....! ஆனாலும்....திரும்பி வந்த பிறகு தானே.... எனக்கு நீ... உனக்கு நான்....!

நாளை புறப்படும் போது... நான் வழக்கமாக....உன்னை பிரியும் போது சொல்லும்...குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோ... என்று சொல்லப்போவதில்லை என்னையே ஒரு குழந்தையாகத்தானே பார்த்துக்கொண்டாய்...இந்த எழுபது நாட்களும்....!

இனி ஒரு போதும் உனை குறை சொல்ல மாட்டேன்.....கண்ணே! நான் வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டதை.... மன்மதனாக... மன்னனாக.... மணாளனாக.... மகனாக.... ஆசை தீர வாழ்ந்து பார்த்துவிட்டேன்!

ஒரு நாள் உண்மை வாழ்க்கை....ஒரு யுகத்தின் வாழ்க்கை என்றால்..... நாம் இருவரும் எழுபது யுகங்கள் வாழ்ந்து விட்டோம் கண்ணே! நீயும் கொடுக்க வேண்டிய அனைத்தையும்....எனக்கு கொடுத்து விட்டாய் அன்பே!

முதல் முறையாக.....இறைவன் என்னை ஏறிட்டு பார்க்கிறான்.... போதுமா?? என்பது போல..... புன்முறுவலுடன்...கரம் கூப்பி திருப்பி சொல்கிறேன்.....! நான் கேட்டதற்கும் அதிகமாய்...கொடுத்துவிட்டாய்....இனி யாசிப்பதற்கு எதுவும் இல்லை என்று!

உறக்கம் வருகிறது.... எங்கிருந்தோ.....காற்றில் தவழ்ந்து அந்த பாடல் எனக்குள் இறங்குகிறது ! "மனைவி அமைவதெல்லாம்......இறைவன் கொடுத்த வரம்.....மனது மயங்கி என்ன....உனக்கும் வாழ்வு வரும்.....!" ஆமாம்...நானும் அந்த கனவு வாழ்வை...வாழ்ந்து பார்த்தேன்....புதிது... புதிதாக...இந்த எழுபது நாட்களும்!

ஒன்று மட்டும் உண்மை..... ஊர் சென்று சேர்ந்த பின்பும்....என் நினைவுகள் என்னவோ ...உன்னையே தான் சுற்றிக்கொண்டிருக்கும்...!

உன்னோடு உண்மையாய் வாழ்ந்த அந்த எழுபது நாட்களை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்கும்!

நான் நாளை முதல் அள்ளிப் பருகும் நீரிலும்.....உண்ணப்போகும் சோறிலும்.....திரும்பி பார்கின்ற திசைகளில் எல்லாமுமாய் ....... என் அன்பிற்கு பால் வார்த்த என்.... அன்னபூரணி உன் அன்பு முகத்தை ... தரிசித்துக்கொண்டே தான் இருப்பேன்!

-உன்னவன்-

Comments

Kalavathi- Audio Version

  • என்னவளும், எழுபது நாட்களும் | Play - Kalavathi

Kalavathi

நான் சொன்னதும் ‌... எழுதியதற்கு முதலில் நன்றி நண்பா...🙏. இந்த எழுத்து இனி எப்பொழுதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்....👍.

எண்ணங்களை எழுத்து வடிவில் பார்க்கும் போது, உன் மனம் இலேசாகிப் போயிருக்கும் தானே...👍😍. அதற்கு தான் எழுதச் சொன்னேன்.

என் கையினால் மணம் கூடியதோ...இல்லை என் குரலினால் அதன் வளம் கூடியதோ... எதுவாயினும் உங்கள் இருவருக்குமிடையேயான அன்பும் பாசமும் உன்னுடைய இந்த வெளிப்பாடால் கண்டிப்பாக முழுமை பெற்றிருக்கும்...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனும் வள்ளுவன் வாக்குக்கேற்ப (மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், நட்பு சுற்றங்களுடன் அறமும் இருந்தால்... அதுவே பண்பும் பயனும் ஆகும்...)


வாழ வாழ்த்துகிறேன்...

🙏🙏🙏.

Senthil_M

Oh my God... ஏற்கனவே GK உசுப்பேத்தி விட்டதில்... அதை அவளுக்கு அனுப்ப... கண்ணை கசக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்... இப்போ இதை அனுப்பினால்... புறப்பட்டு வந்தாலும் வந்து விடுவாள்!

நேற்று... உன்னிடம் புலம்பிக்கொண்டிருந்த போது... "உள்ளத்தில் இருப்பதை எழுதி விடு செந்தில்" என்று நீ சொன்னதும்... இப்படி அள்ளி தெளித்து விட்டேன்! உன் கையினால்.....என் எழுத்திற்கு இன்னும் கொஞ்சம் மணம் கூடிபோயிருக்கிறது...மதுரை மல்லியை போல! நாளை இதை மீண்டும் அவளுக்கு அனுப்புகிறேன்...! என்னை போலவே...அவளும் கொஞ்சம் ஆனந்தமாய் அழுது கொள்ளட்டும்!

மதுரை தமிழச்சிக்கு...இன்னும் ஒரு முறை நன்றி!