கண்ணதாசன்
முத்தையா வாகப் பிறந்து, சிகப்பு ஆச்சிக்கு ரூபாய் ஏழாயிரத்திற்கு (7000) தத்து கொடுக்கப்பட்டு நாராயணனாக வளர்ந்து, நடிப்பிற்காக சந்திரசேகரனாக மிகச் சில காலங்கள் வாய்ப்பு தேடி, இறுதியாக பத்திரிக்கைக்காக கண்ணதாசனாக மாறி, இறுதிவரை கண்ணதாசனாகவே வாழ்ந்து மறைந்த, சரஸ்வதி அருள் பெற்ற, கவிக்கு அரசனாம் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.
தமிழ் மொழியில் தனி ஆட்சி செய்து, காலமாகி நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்று வரை நம்மை ஆளும் இந்த கவியரசரின் சொல்லாட்சியில் இருந்து சில நினைவலைகளை உங்கள் முன் பகிர்வதில் மகிழ்கிறேன் கவியரசரின் கணக்கில்லா ரசிகைகளுள் ஒருவராக...
1927 ல் காரைக்குடிக்கு அருகேயுள்ள சிறுகூடல்பட்டி யில் பிறந்தவர். சாத்தப்பன் அய்யாவிற்கும் விசாலாட்சி ஆச்சிக்கும் பத்து பிள்ளைகளுள் எட்டாவதாகப் பிறந்து எட்டாவது வரை மட்டுமே படித்து, கிட்டத்தட்ட 4000 கவிதைகள், 5000 கற்கும் மேற்பட்ட பாடல்கள், கட்டுரைகள் பலவும் எழுதியவர்.
புரட்சி தலைவர் ஆட்சியில் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்தவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திரைத்துறையில் கோலோச்சியவர். அரசியல்வாதி, கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர்,படத் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
சேரமான் காதலி க்காக சாகித்திய அகாதமி விருது வாங்கியவர். அவரது அர்த்தமுள்ள இந்துமதம் மற்றும் இயேசு காவியம் இரண்டும் மிகவும் புகழ்பெற்றவை.
பிடித்த இலக்கியமான கம்பராமாயணத்தில் இருந்து தான், தனக்கு எழுதும் சக்தியே வந்ததாக வாய் மொழிந்தவர்.
கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினவாகும் ஒரு தினமே...! இதுவே திரைக்காக அவர் எழுதிய முதல் பாடல் கன்னியின் காதலி படத்திற்காக.
மூன்றாம் பிறையில் வரும் கண்ணே கலைமானே அவர் எழுதிய இறுதி பாடலாகி விட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குறைந்த நேரத்தில் ( 10 நிமிடத்தில்) எழுதிய பாடல் முத்தான முத்தல்லவோ எனும் முத்தான பாடல். நீண்ட நேரம் எடுத்து எழுதிய பாடல் நெஞ்சம் மறப்பதில்லை எனும் மறக்க முடியாத பாடல்...!
கவிஞரே ரசித்து கேட்பது... என்னடா பொல்லாத வாழ்க்கை யும் சம்சாரம் என்பது வீணை என்ற பாடலும் தானாம். மனஅமைதிக்காக ஒன்றிப்போவது பள்ளிகொண்டாயோ ஸ்ரீமன் நாராயணா எனும் பக்தி பாடலில்.
வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்த படி, நடந்து கொண்டே பாடல் வரிகள் சொல்லும் பழக்கம் உள்ளவர் கவிஞர். ஊற்றெடுக்கும் தாய் தமிழை வணங்குவது போல், கவிதை சொல்ல நடக்கும் போது காலணி அணியும் பழக்கம் இல்லாதவர் நம் கவிஞர்.
பளிச்சென்று ஆடை அணிவதிலும், பளபளப்பாக நகைகள் அணிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். சமயங்களில் நகைகள் அற்றும் வலம் வருவாராம். ஆச்சரியப்பட்டு கேட்பவரிடம், பள்ளிக்கூடத்திற்கு படிக்கப் போயிருப்பதாக, அடகு வைக்கப்பட்ட நகைகளைப் பற்றி சுவையாகச் சொல்லிச் செல்வாராம்.
மூன்று திருமணங்கள், பதினைந்து பிள்ளைகள் இப்படி உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தவரே ஆயினும் சிந்திக்கும் வேளையில் ரதி யே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தவராம்.
பாட்டுக்கவி பாரதியார் ஐ தனது குருவாக்கியவர். கர்மவீரர் காமராஜரை வெள்ளித் திரையில் காவியமாக்க முயன்றவர். மாமா நேருஜி மேல் அளவுகடந்த பற்று கொண்டவராம். அவர் இறந்த போது, அவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கு எழுதிய இரங்கற்பா வில் சாவே உனக்கு ஒரு சாவு வராதா என சாவைப் பழித்தவர்.
ஆசைக்கு நான்கு படங்களிலும் நடித்தவர். இஷ்டம் போல் தன் வாழ்வை வாழ விரும்பிய கவிஞருக்கு இஷ்ட தெய்வம் கிருஷ்ணர் ஆனார். அந்த இடையோனுக்கு மட்டும் தன் அறையில் இடம் கொடுத்தவர்.
பலவீனங்களை ஒத்துக் கொண்டு, வனவாசம் மனவாசம் என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியவர். நூல்களைப் பின்பற்று...அதன் ஆசிரியர்களை அல்ல... என வாசகர்களுக்கு மொழிந்தவர்.
தான் இல்லையென்றால் தவிக்கும் உறவுகளை தன் கண் கொண்டே பார்க்க வேண்டும் என்ற சின்ன சின்ன ஆனால் கொஞ்சம் பயமுறுத்தும் ஆசையெல்லாம் கவிஞருக்கு வருமாம். இறந்து விட்டதாக தானே வதந்தி கிளப்பிவிட்டு அதன் தவிப்புகளை ரசிப்பாராம்.
அப்படி ரசித்தவர் சொன்ன வதந்தியும் ஒருநாள் உண்மையானது. ஆம் 1981 ல் அமெரிக்காவின் சிகாகோ நகர் மருத்துவமனையில் தனது 54 வது வயதிலேயே, உண்மையாகவே அவர் உறவுகள் மட்டுமல்லாது, தமிழ் நெஞ்சங்கள் அனைத்தையும் கலங்கடித்து, காற்றில் கலந்தார் கவிஞர். பார்க்கத் தான் முடியவில்லையே தவிர, பாடல்கள் மூலம் நம்மோடு பயணப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார் காலத்தை வென்ற கவிஞர்.
காட்டருவி போல் கரை புரண்டு ஓடிய கவிஞரின் பாடல் வரிகள்... தான் இன்றுவரை, ஏன் இனி என்றென்றும் பல இதயங்களை குளிர்வித்துக் கொண்டே இருக்கும். எத்தனை கவிஞர்கள் வந்தாலும் என்றென்றும் கவிஞரின் இடத்தில் கவிஞர் மட்டுமே.
காரைக்குடியில் கவிஞருக்கு மணிமண்டபம் மார்பளவு சிலையுடன். கூடவே நூலகமும் இயங்கி வருகிறது.
என் தந்தைக்காக...என் தாய்க்காக... என் கணவருக்காக...என் மனைவிக்காக...என் பிள்ளைகளுக்காக...என் பிறப்புகளுக்காக... என் காதலுக்காக...என் கனவுகளுக்காக... மொத்தத்தில் எனக்காக...என் வாழ்க்கைக்காக...எழுதிய வரிகளோ என என்னை மட்டுமல்ல எல்லா தமிழ் நெஞ்சங்களையும் நெகிழ வைக்கிற வரிகளை வழங்கியவர் இந்த கவியரசர் கண்ணதாசன்.
உள்ளத்தோடு உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்கக் கூடிய, இதயம் லயித்துப் போகக் கூடிய உணர்ச்சிகள் உறைந்த வார்த்தைகளை வாரி வாரி வழங்கி, மனித மனங்களுக்கு நிம்மதியை தேடித் தந்த அற்புத அதிசிய கவிஞர் இந்த கண்ணதாசன். மறைந்தாலும் வாழும் காலமாகிய காவியக் கவிஞர் இந்த கவியரசர்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று சொல்லிச் சென்ற கவிஞர் அவர். அதன் படி அவரின் பாடல்கள் மூலம் நம்மிடம் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்.
கவியரசரின் பிறந்த தினமான இந்நாளில் நம் நினைவை நினைய விட அவரின் சில முத்தான முத்துக்களை பொழிய விடுகிறேன் இங்கு...
1. நான் பேச நினைப்பதெல்லாம்...
2. நினைக்கத் தெரிந்த மனமே...
3. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
4. உள்ளம் என்பது ஆமை...
5. உன்னைச் சொல்லி குற்றமில்லை...
6. உள்ளத்தில் நல்ல உள்ளம்...
7. மலர்ந்தும் மலராத...
8. மனிதன் மாறி விட்டான்...
9. பிறக்கும் போதும் அழுகின்றான்...
10. வீடு வரை உறவு...
11. போனால் போகட்டும் போடா...
12. இறுதியாக நம்மை தாலாட்டிய கண்ணே கலைமானே இப்படி எத்தனையோ பாடல்கள்...சொல்லிக் கொண்டே போகலாம். நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது நம் கவிஞரின் பாடல்கள். சிலவற்றை இந்த கவிஞரின் நாளில் காது குளிர கேளுங்கள்.
சற்றே ஆசுவாசப் படலாம்...
இந்த பதட்டமான சூழலில்.
மனித குலத்தை கலங்கடிக்கும் இந்த நச்சை நசுக்க முடியாவிட்டாலும், மீண்டும் எழுந்து நிற்க புதுத் தெம்பைத் தரும் நம் கவிஞரின் பாடல் வரிகள்... வாழ்க நம் கவிஞர் கொடுத்த தமிழ்...! வளர்க நம் தாய் தமிழ்...!
🙏🙏🙏.