கல்லூரி காலம்
எண்பதுகளின் இறுதியில் தொடங்கியது எங்கள் கனவுலக கல்லூரி காலம். நினைவுகளை வரிசை படுத்துவதற்கு முன் ஒரு உண்மையை அவசியம் குறிப்பிட வேண்டும். இதை சொல்வதில் சிறிதும் வெட்கம் இல்லை எனக்கு.
பனிரெண்டாம் வகுப்பை விழுந்து புரண்டு ஓரளவு மதிப்பெண்களுடன் (கிட்டத்தட்ட ஆயிரம்) வெற்றிகரமாக முடித்து, வேளாண்மையை தேர்ந்தெடுத்து அதற்கான படிவங்கள் அனுப்பப்பட்டு ஆவண செய்து காத்திருந்த போது , தேர்வு ஆகாமல் போனாலும், மீண்டும் விடாது இரண்டாம் ஆண்டும் முயன்று, விட்ட இடத்தை பிடித்தேன்.
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு என் கையில் கிடைத்த ஒரு சிறிய மஞ்சள் நிற அஞ்சல் அட்டையின் ஒரு புறம் என் பெயருடன் மறு புறம் கொட்டை எழுத்தில் Horticulture என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. வேளாண்மை என்று மட்டுமே அறிந்திருந்த வேளையில் இது என்ன ஹார்ட் டிக்கல்சர்?அப்பொழுது எனக்கு தெரிந்ததெல்லாம் ஹார்ட் என்றால் இதயம் என்று தான்.
பதட்டத்தில் எழுத்துக் கோர்வை கூட குழப்பத்தை உண்டு பண்ண, அப்பாவின் லிஃப்கோ அகராதியில் அர்த்தம் தேட தொடங்கிய அந்த நிமிடங்களை இப்பொழுது சொல்வதிலும் வெட்கம் இல்லை.
புரிந்து கொள்ள முடியாத ஒரு தொடக்க நிலை அந்த நிமிடங்கள். மிகவும் கண்டிப்பான, அஞ்சல் நிலைய அதிகாரியின் மகளாக பிறந்ததால் பள்ளி தவிர வெளியிடங்களுக்கு அதிகம் சென்றதில்லை. முதன் முறையாக படிப்பிற்காக என் மதுரையை விட்டு கொங்கு நாட்டில். முதன் முறையாக வீட்டை விட்டு விடுதி வாழ்க்கையில். முதன் முறையாக இருபாலரும் இணைந்து பயிலும் சூழலில். முதன் முறையாக ஆங்கில வழி கல்வியில்.
இப்படி பல விதமான முதன் முறை குழப்பங்களுடனும் மிகுந்த அச்சத்துடனும் தான் ஆரம்பித்தது எனக்கான கல்லூரி வாழ்க்கை. கோவில் நகருக்கும் கொங்கு மண்டலத்திற்குமான இடைவெளி, பேருந்து பயணமாக ஐந்து மணி நேரம். ஏதோ நாடு விட்டு நாடு போவது போன்ற உணர்வு. பயண நேரம் முழுவதும் பல பல கனவுகளுடனே பயணித்தது. தாராபுரத்தில் ஒரு சில நிமிடங்கள் நிறுத்தம் இருக்கும். குடிக்கவும், குடித்ததை கழிக்கவும், ஒரு சிறு இடைவேளை. சரியாக தேனீர் நிலையத்தின் எதிரேயே பேருந்து நிறுத்தி வைக்கப் படும். எப்பொழுதும் எல்லோரையும் போலவே நானும் ஜன்னலோர இருக்கையையே அதிகம் விரும்புபவள்.
ஏதோ ஒரு பாதுகாப்போடு பயணிக்கும் உணர்வைத் தரும் என்பது ஒரு புறம் இருந்தாலும், பயணம் முழுவதும் பார்வை சாளரம் தாண்டி சங்கதிகள் பேசுவதில் லயித்துப் போகும். அதில் கிடைக்கும் சுகமே தனி தான். நெருக்கடி நிலை வந்தால் ஒழிய பேருந்தை விட்டு பெரும்பாலும் இறங்குவதே இல்லை. எதிரே இருக்கும் தேனீர் நிலையத்தில் , லாவகமாக மேலும் கீழும் நூல் பிடித்தார் போல் ஆற்றி, நுரை ததும்ப அவர் கொடுக்கும் தேனீரின் நறுமணம், கம்பிகளினூடே அமர்ந்திருக்கும் என் நாசியை துளைக்கும்.
தனித்து பயணம் செய்து பழக்கப் படாததால் பயத்திலேயே இறங்காமல் வந்ததுண்டு. விருதுநகரில் இருந்து வரும் வகுப்புத் தோழிக்கு காத்திருந்து பிறகு இருவருமாக துணைக்கு துணையாக பயணம் செய்த நாட்களும் உண்டு. இருவரின் தகப்பன்மார்களும் ஒரே பேருந்தில் எங்களை அருகருகே அமரவைத்து நிம்மதியாகச் சென்ற இனிய நினைவுகள் இப்பொழுதும் வந்து வந்து போகும். ஆரம்ப காலத்தில் எனக்கு அதிகம் ஆதரவாக இருந்த பெருந்தலைவர் பூமி கொடுத்த பாண்டி மகள் அவள். இலக்கை அடைந்து சேர்க்கையும் முடிந்து காத்திருந்த கணங்கள் எப்பொழுதும் கண் முன்னே நிழலாடும் .
ஆனால் இப்பொழுது கண்ணீருடன் இதயம் கனத்து போகிறது. காரணம் அன்று உடன் இருந்த ஒரு தோழி. அரவங்காட்டு அழகி.எதுவுமே வெளிப் படுத்திக் கொள்ளாமல், எதிர்பாராத இழப்பை எங்களுக்கு கொடுத்து விட்டு சென்றது தான்.
கல்லூரி வாழ்க்கையில் கற்றது, கேட்டது, புரிந்தது, அறிந்தது, தெரிந்தது, தெளிந்தது... என எத்தனையோ இருக்கின்றது. சிலவைகள் காலத்தின் ஓட்டத்தில் கரைந்தே போயின. வாழ்க்கை வேறு வேறு திசைகளில் பரிணமிக்கும் போது மிகச் சிலவைகளே படிமமாக தேங்கி விடுகின்றன. இருப்பினும் இயன்றவரை இயம்ப முயல்கிறேன். (அடிப்படையில் நான் கொஞ்சம் ஞாபகமறதியான பெண்.) நாங்கள் பயின்றது பரந்து விரிந்த பல்கலைக்கழகத்தில். நுழைவு வாயில்கள் ஒன்று, இரண்டு என வரிசை படுத்தப் பட்டு நிறைய வாயில்களை கொண்டது எங்கள் வளாகம். நுழைந்தால் செங்கல் நிற பிரமாண்ட கட்டடங்கள். எங்கும் மரம் செடி கொடிகள். நடந்தால் அடைய முடியாத நடை பாதைகள். எங்கும் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தங்களின் பிரிய வாகனமான மிதிவண்டியில் ஊர்வலமாக. சீருடை என்னவோ காக்கி நிறமே. ஆனாலும் கம்பீரமாகத் தான் இருக்கும். மண்ணின் நிறமல்லவா. தினசரியில் கட்டாயமாக்கப் பட்டாலும், மனம் விரும்பித் தான் அணிந்து கொண்டோம் . பூக்கள்,காய்கள், கனிகள்,என வண்ணங்கள் நிறைந்த,ருசி நிறைந்த,சுவை கலந்த, மணம் நிறைந்த, மனம் கவர்ந்த கல்வி தான் நாம் பயின்றது. முதலாண்டில் நர்மதா எனும் பெயர் கொண்ட மணற்கல் நிற கட்டிடத்தில்,வீட்டின் ஏக்கங்களுடனே கண்ணீரோடு கரைந்த நாட்களும் உண்டு.
ஆரம்ப நாட்களிலேயே எப்பொழுதும் அழகாக உடுத்திக் கொண்டு , சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் பாடத்தையும் சிறந்த முறையில் படித்துக் கொண்டு, எல்லாவற்றிலும் முதன்மையாக வலம் வரும் ஒரு சில 'ம' வரிசை தேவதைகளைப் பார்க்கும்போது வியந்து போயிருக்கிறேன். நுனி நாக்கில் அந்நிய பாஷையை அநாயாசமாக சுழல விடும் பேரழகை விழிகள் விரிய ரசித்திருக்கிறேன். என் போன்ற பின்புலத்தில் வந்த சில தோழிகளுடன் கூட்டு சேர்ந்து தைரியத்தை வரவழைத்ததோடு, கூட்டுக் கல்வி முறையில் பயின்று ஒரளவு நாங்களும் நிலைத்து நிற்க கற்றுக் கொண்டோம். தடுமாறும் போதெல்லாம் கை கொடுத்த தோழிகளை என்றுமே மறக்க முடியாது. குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். செங்கல்பட்டு மண் அனுப்பிய தாய்யுள்ளம் கொண்ட தாரகை அவள். அந்த தாரகையும் மண்ணை விட்டு விண்ணை அடைந்து எங்கள் கண்களை குளமாக்கி காற்றில் கலந்து விட்டாள். நர்மதாவின் மதில் அருகே குவிந்து கிடக்கும் மணல் குன்றில் அமர வைத்து,புரிய மறுத்த ஆங்கிலத்தை, தமிழ் படுத்தி எளிய முறையில் புரிய வைத்தவள். மறக்க முடியாத மாலை பொழுதுகள் அவை.
மிதிவண்டியை மிதிக்க கற்றுக் கொடுத்த மணியான தோழி. படிப்பதற்கும் எப்பொழுதும் பக்கத்துணை இருப்பவள் அவள். சாந்தமான அவளுடன் தானியக் (மில்லெட்) காட்டிலும், பேராசிரியர்களின் வாகன கொட்டகைக்குள்ளும் படித்த நாட்கள் என்றும் பசுமையானவைகள்.இன்று தன் இரு சிங்கப் பெண்களை புரட்சிப் பெண்களாக வளர்த்து வரும் பெருமை கொண்ட மணியான பெண் இவள்.
கிடைக்கும் நேரமெல்லாம் கையில் தலையணை பருமனில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு,அலசிய தன் நீண்ட கூந்தலை காற்றில் அலைய விட்டு, சரித்திர நாவல்களின் கதாபாத்திரங்களுடனேயே கதை பேசும் ஆரோக்கிய மங்கை. பாளையங்கோட்டை தந்த பைங்கிளி. வாழ்க்கையில் அனேக சோதனைகள் வந்த போதும் இரும்பு மனுஷியாக தனி ஒருத்தியாக இரண்டு சிங்கக் குட்டிகளை வளர்த்தெடுத்து , வரலாற்று படைப்புகளை புரட்டிய விரல்களை,வங்கி கணக்குகளுக்கு ஒப்புக் கொடுத்து, வங்கி அதிகாரியாகவும் உயர்ந்து நிற்கும் சாதனை நாயகி அவள்.
சுத்தி வந்தால் சொந்தம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். என்கிற உரிமையில் அப்பப்போ என்னை அக்கா அக்கா என்று அன்பாக அழைக்கும் அருமை தோழி.திண்டுக்கல் தந்த தங்கை.அழகிய குட்டிப் பெண்.கொஞ்சம் சுட்டிப் பெண்ணும் கூட. காதல் கணவனோடு விரும்பிய வாழ்க்கையில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் ஆசீர்வதிக்கப் பட்டவள். இசை ஞானம் பெற்ற இனியவள். எங்கள் துறையில் இன்று அவளும் ஒரு பேரராசிரியையாக எங்களை பெருமை படுத்துகிறாள்.
கொங்கு நாடு கொடுத்த உயர்ந்த மெல்லிடையாள். கொங்கு தமிழை கொஞ்சி கொஞ்சிப் பேசி எங்களையெல்லாம் மயக்கிய (உடுமலை) பேட்டை ராணி. சங்கரனின் துணையான இந்த உடுமலை உமையவள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி இரண்டு கண் மணிகளோடு ஆட்சி நடத்தும் அதிகாரி.
அமைதியின் மறுவுருவம்.கொழுக் மொழுக் கென்ற வட்ட முகம் கொண்ட அதிகம் பேசாத ஆறு விரல் அதிஷ்ட தேவதை. இடையில் ஆரோக்கியம் அச்சுறுத்திய போதும் ,மீண்டு எழுந்து கணவரின் காரியங்கள் அனைத்திலும் கை கொடுத்து , இன்றும் அதே பொழிவுடன் தன் செல்ல மகனின் அழகு தாயாக வலம் வரும் கிருஷ்ணகிரி தந்த கொழு பொம்மை இவள்.
எப்பொழுதும் படு கவனமாக ,குறிக்கோளோடு நெறிமுறை தவறாத , சுருக்கமாக சொன்னால் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் மறுவுருவம் எங்கள் தீவட்டிபட்டி தந்த நெருப்புப் பெண்.இன்று தன் கடமை உணர்ச்சியால் தன் துறையில் உயர்ந்து நிற்கும் தன்னிகரற்ற தங்கப் பெண் இவள்.ஆண் மகனோடு நடனமங்கையையும் வளர்த்தெடுக்கும் தாயுமானவள்.
எங்கள் இருவருக்கும் ஊரின் உறவு உண்டு. எங்கள் ஊருக்கே உரித்தான கலகலப்போடு சுற்றித் திரிந்த இரட்டை ஜடை சுட்டிப் பெண்.பழக்கம் எல்லாம் பெரும்பாலும் வேளாண்மை பொறியியலோடு தான் என்றாலும், தன் வகுப்புத் தோழிகளையும் பார்ட்னராக்கிய, சங்கம் வளர்த்த மண்ணின் மங்கை. இன்று எங்கள் துறையில் உயர் பதவியில், பெருமை மிக்க மனைவியாக, தாயாக,வெற்றி மகளாய் என் மண்ணின் மகள் எனக்கு பெருமை சேர்க்கிறாள்.
தந்தை வழிப் படிப்பையே தனதாக்கி, தனக்கென்று தனி இடம் பிடித்து சரஸ்வதி தேவியின் அருளை முழுவதுமாக பெற்ற ஈசனின் உமையவள் இந்த சேலத்து கலைமகள். நாங்கள் பார்த்து வளர்ந்த இனிய காதல் மலர்கள் இவர்கள். இன்று ஒரே துறையில் வெற்றித் தம்பதிகளாக. இரட்டை ரோஜாக்களால் ஆசீர்வதிக்கப் பட்டு இருக்கும் அறிவு மகள் இவள்.
தருமபுரியின் மூக்குத்தி அழகி. திராவிட நிறத்துக்கு சொந்தக்காரி. தமிழ் கொண்டு அழைக்கப்படும் செல்வி அவள். இன்று நீதி தேவதையிடம் பணி. தனக்கொன்றும், தன் துணைக்கு ஒன்றும் என இரண்டு செல்வங்களோடு வாழும் செல்வி இவள். அந்நாளிலிலே ஆங்கில இதழ்களின் வாசகி. பாபாவின் பற்றாளர்.இந்தி(ய) மொழி படித்து, பாண்டியன் சின்னத்தையே தனதாக்கிய போதும்,அவன் வளர்த்த மொழி படிக்க தவறியவள். இதனாலேயே பலமுறை என்னால் அந்நியமாக பார்க்கப் பட்ட காஞ்சி பெண். இன்னுமொரு அந்நிய பாஷையை அறிந்து வைத்துக் கொண்டு இப்போதும் அதற்கு தொண்டு செய்யும் பன்மொழி வித்தகி. கண்ணுக்கு கண்ணான தன் இளவரசியுடன் ரா (ஜ்)ஜாவின் பார்வையில் இந்த மதுரையின் ஆட்சியாள்.
எங்கள் காலத்து காவிய மங்கை. சரோஜ் (சரோஜாதேவி) என என்னால் செல்லமாக அழைக்கப்படுபவள். சிவாஜி, கண்ணதாசன், பழைய பாடல்கள் என்ற வரிசையில் உறவாகிப் போனவள் எனக்கு. அழகிய தாய்க்கு மகளானவள்.வார்த்தைகளை வீசிச் செல்லும் வேகக்காரி. கேரளத்து வாசம் வீசும் நாகர் பூமி தந்த ஈஸ்வரி. தானும் தலைமகள், தனக்கும் மகளே தலையாயி,கட்டிக் காக்க இளைய மகன்,முழுமை பெற்ற குடும்ப வாழ்வு. துணைவரின் பணிச் சுமையையும் சேர்த்து சுமக்கும் கடமை உணர்வுள்ள கண்ணழகி. என்னோடு என் தமிழோடு எப்போதும் கை கோர்க்கும் தமிழ் சொல்லழகி.
மலைதேச மங்கையர் எங்களுள் மூவர். அரவங்காடு,குன்னூர்,ஊட்டியின் மையப்பகுதி...என மூன்று அழகிய இயற்கை நிலப் பரப்புகள் அவர்களின் குடியிருப்புகள். அரவங்காடு தோழி பற்றி ஆரம்பத்திலேயே எடுத்துரைத்தேன்.
இப்பொழுது குன்னூரின் லெட்சுமிக்கு வருகின்றேன். தைரிய லெட்சுமியான இவள் விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றவள். இருசக்கர வாகனத்தில் (கைனடிக்) இஷ்டம் போல் மலைப் பாதைகளிலும் சாகஸம் புரியும் துணிச்சல்காரி. மலையேறும்(Trekking) மங்கை. எங்கள் துறையிலேயே ஆராய்ச்சி பணி ஆஸ்திரேலியா கண்டத்தில். இன்று வரை ஒத்த மனுஷியாக , தன் கையே தனக்குதவி என்பது போல் வாழ்க்கையிலும் தனி ஒருத்தியாக நின்று ஜெயித்துக் கொண்டிருப்பவள் இந்த மகா மனுஷி.
இறுதியாக மலைகளின் ராணி ஊட்டியில் இருந்து எங்கள் (தோட்ட) கலைகளின் ராணி. கண்ணுக்கு அழகி.செஞ்சு வச்ச குத்து விளக்கு.வடிச்சு வச்ச அம்மன் சிலை. கும்பிடத் தோணும் குணவதி. முத்து உதிராம சிரிக்கத் தெரிந்த சிற்பம் அவள். அவள் பார்வை பட பல விழிகள் காத்திருந்த போதும், அலட்டிக்கொள்ளாமல் அழகாக ஒதுங்கி அமைதி வழி நடந்தவள். சத்தியவானுக்கு ஒரு சாவித்திரி வரிசையில் இந்த செல்வனுக்கு வாய்த்த எங்கள் செல்ல புத்திரி.
எனக்கு மிக நெருக்கமாகிப் போனவள். அன்பு தந்ததோடு தன் குடும்ப உறுப்பினர்களில் என்னையும் இணைத்து பாசம் காண்பித்த பேரழகி. கண்மணிகள் போன்ற இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டு ராஜாவின் ராணியாய் வாழ்பவள் இந்த பேரழகி.
என்னோடு பயின்ற பதினாறு சினேகிதிகளின் குறிப்புகளை நான் அறிந்த வரை,ஒரு சிறு முன்னுரையாக கொடுத்திருக்கிறேன். அது சரி... இருபாலரும் இணைந்த படிப்பல்லவா? எங்கள் கல்லூரி படிப்பு.
எங்கே போனார்கள் இந்த தோழர்கள் என்றால் ! அனைவரும் இருந்தார்கள். ஆனால் எங்கள் காலத்தில் அத்தனை அன்யோன்யம் கிடையாது. அதிலும் என் போன்ற ஒரு சிலர் ,மிகச் சிலருடன் மட்டுமே பேசியே இருப்போம். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் முதலில் நினைவுக்கு வருபவர்,சென்னை மாகாணத்தின் நவரசத் திலகம் . எல்லோரிடமும் வெகு சகஜமாக பழகக் கூடிய பெ...ரு...ம் பேச்சாளர். அப்பப்போ பேசும் சந்தர்ப்பம் எங்களுக்குள் வந்ததற்கு எனக்கு முந்தைய அடையாள எண்ணை கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். வேறுபாடே இல்லாமல் பழகக் கூடிய விசால மனம் படைத்த இனிய நண்பன். இன்னொருவர். பிதா மகன். குரலால் தனித்து தெரிபவர். உருவத்திலும் உயரத்திலும் என் சகோதரனின் தோற்றம் கொண்டதால் அன்றிலிருந்து இன்றுவரை தம்பி என்றே என்னால் அழைக்கப் படுபவர். இன்று மிக உயர்ந்த பொறுப்பில். மகனை மருத்துவ துறையில் நுழைத்து தன் சொந்த மானுடன் அந்த மானில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ந்த சகோதரன்.
இவர்கள் இருவர் தவிர கிட்டத்தட்ட முப்பத்தைந்திற்கும் மேல் தோழர்கள் இருந்த போதும் அவசியம் கருதி மிகச் சிலருடன் மட்டுமே பேசி இருக்கலாம் என நினைக்கிறேன். இவர்கள் தவிர அன்றைய நாளில் நாங்கள் அறிந்தது. வருகைப் பதிவேட்டில் முதல் பெயர் என்பதாலேயே அறியப்பட்ட ஆனந்தமயமானவன். எப்பொழுதும் ஒரு தோள் பையுடன் நெற்றியில் குங்குமத்துடன் வலம் வரும் ஒரு பெருமாள். அந்தப் பெருமாளின் பையிலும் எத்தனை ரகசியங்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.
புலனத்தின் வழி இப்போது புரிய வரும்போது மலைத்துப் போகிறேன். அடுத்து தன் சங்கீதத்தால் பேசும் குமரன் மகன். வகுப்பு தலைவன் என்ற முறையில் லிங்கராஜா. மலையாள வாடை கொண்ட அச்சன் பாபு. வில்லன் போன்றே தோன்றினாலும்,பெயரில் மிதவாதியை முதல் பாதியாய் கொண்டு இருக்கும் குமார்.
எப்பொழுதாவது அறியப் படும் சில இராஜ குமாரர்களும் உண்டு.இன்று ஒரு ராஜாவின் மாற்றம் என்னை பிரமிக்க வைக்கிறது.என்ன ஒரு பக்குவம்,எதிலும் ஒரு வித்தியாசம், எதையும் நோகாமல் எடுத்துரைக்கும் விதம்,அப்பப்போ நிகழ்த்தும் சாகசம், எல்லாமும் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. எங்கள் புலனத்தின் குழுவை இன்று வரை கொண்டு செல்வதில் மிகப் பெரும் பங்கு இந்த இராஜ குமாரனுக்கு உண்டு.நன்றி சொல்ல தோன்றுகிறது.நன்றி ராஜா எங்கள் அனைவரின் சார்பாக. முருகனின் புனைப்பெயர்களில் வலம் வரும் பல குமரர்களும் உண்டு.இவர்கள் எல்லாம் அமைதியான ஜீவன்கள் போன்றே தோன்றும் அந்நாளில். அதில் ஒரு குமரன் என் போன்றே பாரதியை பற்றிக் கொண்டு இருப்பதை இப்போது தெரிந்து மகிழ்ந்து போகிறேன். இன்னுமொரு குமரன்,பெயரோடு வேல் ஏந்திய பெருமாள். அந்த ஜீவன் பற்றி அவசியம் நான் குறிப்பிட வேண்டும். எப்பொழுதும் ஒரு சுட்டிப் பையனின் குறு குறுப்போடு சுற்றி வந்த வேலன் அவன். உருவத்திலும் சிறியவன். இப்பொழுது நினைத்து பார்த்தாலும் அந்த சுருட்டை முடியும் சிரித்த முகமும் தான் கண் முன் வருகிறது. இந்த ஜீவனும் இத்தனை விரைவாக கண் மூடி சென்று விடும் என்பதும் நினைத்து பார்க்காத ஒன்று. இன்னும் சில பேர் நினைவுக்கே வர வில்லை. தவறாக எண்ண வேண்டாம்.
தோழிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் அனைவரையும் வரிசைப்படுத்த முடிந்தது. தோழர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் கொஞ்சம் தடுமாற்றம். மற்றபடி அனைத்து தோழர்களுமே அருமையான வர்கள்.அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான வர்கள்.
இன்று அனைவருமே அவரவர் துறையில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் பெருமை கலந்த மகிழ்ச்சி.
அடுத்ததாக வணக்கத்துக்குரிய வர்கள். எங்கள் பேராசிரியர்கள் பெரும் மதிப்புக்குரிய வர்கள். முதலாண்டில் தோட்டக்கலை எங்களுக்கு அறிமுகமாகியது எலுமிச்சை மஞ்சள் நிற அட்டை வழியாகத் தான். அதை அறிமுகப் படுத்தியவர் இப்பொழுது எங்கள் பல்கலைக்கழக ஆட்சிப் பொறுப்பில். எங்கள் துறைக்கு பெருமை சேர்க்கிறார்.
அழகான மணவாளன், குழலூதும் கண்ணன், வாழையின் சத்தியவான், பால்கன் குமார்,போன்ற எங்கள் துறையின் ஆசான்கள் அனைவரும் என்றும் எங்கள் மதிப்பிற்குரியவர்கள். வருகைப் பதிவேட்டை பார்க்காமலேயே சிறிதும் பிறழாமல் மாணவர்களை வரிசை படுத்தி அழைக்கும் முத்தான பேராசிரியரை என்றுமே மறக்க முடியாது.
முதலாண்டில் புரிந்தும் புரியாமல் தவித்த போது தமிழ் வழியாகவும் கற்றுக் கொடுத்த சுந்தரரான பேராசிரியரை அவர் மறைந்தாலும் நம்மால் மறக்க முடியாது. பூச்சியியலில் விழிகளை உருட்டிக் கொண்டு வரும் உமையின் பதியும் கொஞ்சம் விளையாட்டானவர் தான் என்றாலும், நினைவில் நிற்பவர். அவரின் கூடுதல் திறமையான ஓவியம் வரைதல் எனக்கு அவரை இன்று வரை ஞாபகப் படுத்தும். காரணம் நானும் இன்று ஓவியக் கலையில் கொஞ்சம் மெனக்கெடுவதால். அன்று அவர் கொடுத்த மீராவின் ஓவியம் அவரின் கையெழுத்தோடு இன்றும் எனது நிழற்படங்களின் செருகேட்டில் உள்ளது.
ஆங்கில பேராசிரியர் முதலாமாண்டில் சுய அறிமுகம் செய்ய சொன்ன போது, அனைவரும் அவரவர் பங்குக்கு தங்களை அறிமுகப்படுத்தியது. எனக்கான முறை வந்த போது நான் சொல்லிய ஒரு சிறு புதுக் கவிதை கேட்டு,நீ உட்காருமா எனக்கு ஒன்றும் புரியவில்லை என டி.ராஜேந்தர் பாணியில் அமைந்த என் வரிகளைக் கேட்டு குபுக்கென்று சிரித்த 'கிக் தி பக்கெட்' பேராசிரியர்.
இப்படி நமக்கு கற்றுக் கொடுத்த அனைவருமே வணக்கத்துக்குரியவர்கள். விட்டுப் போனவர்கள் நிறைய பேர். அனைவருமே வாழ்த்துதலுக்கரியவர்கள் தான் என்பதில் ஐயமில்லை. அறிமுகம் தவிர அன்றைய சில சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்வதில் மகிழ்கிறேன்.
முருகப்பெருமானின் மிகத் தீவிர பக்தையான தோழி (கண்ணழகி) தினமும் விடுதியின் வாயிலிலேயே குடி கொண்டிருக்கும் தெய்வத்தை வழிபடச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவள். அந்நாளில் பெரிதாக ஆண்டவன் பால் பற்று இல்லாது போனதால் , அதன் அருகே இருக்கும் சிறிய பாலத்தில் அமர்ந்து கொண்டு நாத்திகம் என்ற பெயரில் வேடிக்கை பார்த்த நாட்கள் இப்பொழுது வேடிக்கையாகத் தோன்றுகிறது.
ஒரு ரம்யமான மாலைப் பொழுதில்...கொட்டித் தீர்த்த மழையில் நர்மதா விடுதியின் மாடியில் ஆடிய ஆட்டம் நினைவிருக்கும் (மதி) வரை என் நினைவில் இருக்கும். ஆரம்ப நாட்களிலேயே போராட்டத்தில் களம் இறங்கி, மாற்றிய பல்கலைக்கழகத்தின் பெயரை மீண்டும் மாற்ற சொல்லி உண்ணாவிரதம் இருந்து , அரசு மருத்துவமனையில் சொட்டு மருந்து ஏற்றி படுத்திருந்த பரிதாப நிமிடங்கள்.
கங்கையின் பெயர் கொண்ட விடுதியில் ஒரு மிதமான மாலைப் பொழுதில் அளவளாவிக் கொண்டு இருந்தபோது, மதுரையின் அப்போதைய வெட்ப நிலை பற்றிய விவாதத்தில் நான் "மதுரையில மழை வந்தால் மழையே வந்திடும்" என்றதும் குழம்பிப் போய் என்ன தமிழ் இது என குபீரென சிரித்து மகிழ்ந்த நிமிடங்கள்.
வைகை விடுதியில் தொலைக்காட்சி கூடத்தில் கருப்பு வெள்ளை காட்சிகளை கண்ணழகியோடு ரசித்துப் பார்த்த நிமிடங்கள். கல்லூரியில் இடைவேளையில் மிதிவண்டி தேனீரை தேடி, புற்களின் நடுவே சாவகாசமாக நடந்து சென்று தேனீரை சுவைத்த நிமிடங்கள்.
பெரும்பாலும் அத்தனை கோப்பைகளின் கணக்கும் கண்ணழகியாலே தான் தீர்க்கப்படும் என்பதும் நினைவில் இருக்கிறது. கிருஷ்ணகிரியில் கொழு பொம்மையின் வீட்டில் வயிறு நிறைய மதிய உணவு சாப்பிட்டு, கூடத்தில் வசதியாக படுத்துக் கொண்டு சிவாஜியின் படங்களை ரசித்துப் பார்த்த தினம்.
குன்னூரில் லெட்சுமி கரமான வீட்டில் அம்மா அப்பாவுடன் அமர்ந்து பழைய பாடல்களை ரசித்து ரசித்துப் பார்த்தது. கிடைக்கும் விடுமுறைகளில் எல்லாம் ஊட்டி ராணியின் மாளிகையில் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக உரிமையோடு வலம் வந்தது. அவர்களும் என்னையும் தன் பெண்ணாக,சகோதரியாக வைத்து கொண்டாடியது. இந்திய சுற்றுப் பயணத்தின் போது நம் தோழி , பாளையங்கோட்டை பைங்கிளி,ஆசையோடு பனிச்சறுக்கு விளையாடி பின் குளிர் தாளாமல் அவள் நடுங்க அனைவரும் அவள் கை தேய்த்து, கால் தேய்த்து, சூடு ஏற்ற போராடிய சில நிமிடங்கள். அப்பப்போ நடக்கும் பாட்டுக் கச்சேரி. தத்தம் அய்யா அவர்களின் குரலில் கேட்டு ரசித்த சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே...பாடல். விழியழகியும் பிதா மகனும் கூட அடிக்கடி பாடிக் கேட்டதுண்டு. புரட்சி தலைவரின் பாடல்கள் பிதாமகனின் குரலில் பிரபலப்படும். ஜிக்கி, சுசீலாவின் பாடல்கள் கண்ணழகியின் குரலில் கவி பாடும். பொழுதுபோக்கிற்காக எத்தனை பேர் பாடினாலும் பாடகர்களாக வலம் வந்தது குமரன் மகனும், திண்டுக்கல் தங்கையும் தான்.
கிராம புற நிகழ்ச்சிக்காக நாம் தங்கியிருந்த சமயத்தில் , அங்கு நாம் நடத்திய நிகழ்ச்சியில்,நவரச நாயகன் 'எங்கிருந்தாலும் வாழ்க' என பாடி கிராம மக்களை பரவசப் படுத்திய நாள். அதே ஊரில் பந்தி போட்டு பரிமாறி நாம் அனைவரும் உண்டு மகிழ்ந்த நாட்கள். அங்கு தண்ணீர் இல்லாமல் தவித்த சில தினங்களும் உண்டு.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கிராமத்து குழந்தை களுக்கு கல்வி பயிற்றுவித்த இனிய அரிய குறித்து வைக்கப் பட வேண்டிய மாலைப் பொழுதுகள். தடியன் குடிசையில் தங்கியிருந்த போதும் நாமே சமைத்து உண்பதும், அட்டைகளினூடே பெரும் அச்சத்தோடு கொட்டைவடிநீர் பயிற்சியை முடித்ததும் நினைவில் நிற்பவை. கொடைக்கானலில் குமிளிப்பழங்களை முதன் முறையாக மரங்களில் பார்த்தது. விருத்தாச்சலத்தில் முந்திரி காட்டுக்குள் பாடம் பயின்றது. தேனீரைப் படிக்க ஊட்டி மலை ஏறியது. ஒரு பகுதி ஏற்காட்டிற்கும்,மறு பகுதி வால்பாறைக்குமாக பிரிந்து சென்று,சமைத்தும், படித்தும் கழித்த நாட்கள்.
அங்கு இரவுப் பொழுதில் வானொலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டு முற்றத்தில் நிலா காய்ந்த ராத்திரிகள். இப்படி நம் தமிழ் நாட்டிலும், தாய் நாட்டிலும் படிப்பிற்காக பயணித்த நகரங்களும், நாட்களும் சுவாரஸ்யமானவைகள். நம் அனைவருக்குமான நட்பை கொஞ்சம் ஆழப்படுத்திய நாட்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம். இவை தவிர மிக முக்கியமாக நமக்கான நம் பழத்தோட்டமும் தாவரவியல் பூங்காவும் சில பல கதைகள் சொல்லும். பப்பாளி வயலில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டே பழத்தையும் ருசித்து சாப்பிட்ட நேரங்கள். சப்போட்டா மரத்துடன் சமரசம் பேசிய நிமிடங்கள். கொய்யாவுடன் கொஞ்சிப் பேசிய நாட்கள். நெல்லியுடன் நெருங்கி உறவாடிய நொடிகள். கொடி முந்திரியுடன் கை கோர்த்த பொழுதுகள். வாழையை வளைத்துப் போட்ட நாட்கள். செந்தாழையிலும் சொக்கித் திரிந்த நிமிடங்கள். கிச்சிலிப் பழங்களுடன் குதூகலித்த நிமிடங்கள். மாதுளையில் மயங்கி கிடந்த நிமிடங்கள். தக்காளியை தரம் பார்த்த தினங்கள். கத்திரியை கணக்குப் பார்த்த நாட்கள். வெண்டையை வெரிச்சுப் பார்த்த நாட்கள். வெங்காயத்தை வேவு பார்த்த நாட்கள். ரோஜாவுடன் சுற்றி வந்த நாட்கள். மல்லிக்கு மனதை அள்ளிக் கொடுத்த நாட்கள். செவ்வந்தியுடன் கலந்து பேசிய நாட்கள். கனகாம்பரத்துடன் காதில் பேசிய ரகசியங்கள். இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். சுவையான இன்னொரு பகுதி எங்கள் உணவு விடுதி. சனி காலை பரிமாறப்படும் ரொட்டித் துண்டுடன் கூடிய குருமா ஒரு தனி சுவை. எனக்குப் பிடித்த ஒன்று அது. தினமும் இரவு தரும் நீண்ட பச்சை வாழைப்பழம். சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கொண்டாட்டம் தான். கம கமக்கும் நெய் சோற்றின் மணம் காற்றில் கலந்து வந்து நம்மை விடுதிக்கு இழுத்துச் செல்லும். சமைத்தவர்களும் பரிமாறியவர்களும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். பெயர்கள் தான் மறந்து விட்டன.
கல்லூரியை தாண்டி மலையேறினால் மருதமலை.அனைவருக்கும் பிடித்த இடம்.குமரன் குடி கொண்டிருக்கும் குன்று.அனைவருக்கும் நெருக்கமானவர் இந்த முருகப்பெருமான். ஆர்.எஸ் புரம், காந்தி பார்க், காந்தி புரம் போன்ற இடங்களுக்கு மிதிவண்டியில் இறக்கை கட்டி பறந்த நாட்களை இப்போது நினைத்தாலும் இருபுறமும் குளிர் காற்று வீசுகிறது.
எங்கள் கல்லூரி வளாக வங்கி, அஞ்சல் அலுவலகம்,நூலகம், மைதானம், அதன் அருகே நகல் கடை, மற்றும் கலை கட்டும் அரங்கம் அனைத்துமே என்றாவது எப்போதாவது நினைவுகளில் வந்து செல்லும் என்பது முற்றிலும் உண்மை.
இளங்கலை படிப்பை முடித்து, (உதவித்தொகை க்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும்) முதுகலையை தொடர மறுத்து மிகப் பெரிய தவறைச் செய்து விட்டோமோ என வருந்திய நாட்களில் கண்ணழகியின் தூண்டுதலால் மீண்டும் எங்கள் கல்லூரிக்குள் வாசம் துவங்கியது சில ஆண்டுகளுக்குப் பின். இம்முறை இளநிலை ஆராய்ச்சியாளராக... (JRF)கடமையே குறிக்கோளாக கொண்ட தீவட்டிப்பட்டி தோழியுடன். சில காலங்களே ஆனாலும் மறக்க முடியாத நாட்கள். இம்முறை பழத்தோட்டம் எனக்கு மிக நெருக்கமாகிப் போனது.அங்கு தோட்ட பணியில் இருந்த சகோதரிகள் சொந்தமாக பார்க்கப் பட்ட தினங்கள். அனைவருக்கும் பிரியமான பேராசிரியர், வளர்ந்தவர்,சிதம்பரநாதர் அவர்களின் கீழ் பணி புரிந்த தருணங்கள் அருமையானவைகள். அந்த பணிக் காலங்களில் எங்களுக்கு தங்க இடம் அளித்த மல்லிகை மணம் வீசும் பேராசிரியரும், அவர் தம் வணங்கா துணைவர் , பேராசிரியர் அவர்களும் என்றும் எங்கள் நன்றிக்கு பாத்திரமானவர்கள்.
அங்கேயே மேல் தளத்தில் இருந்த இன்னுமொரு பேராசிரியத் தம்பதிகளை மறக்கவே முடியாது. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் உரிமையோடு உலா வருவோம். உலகை விட்டுப் அவர் போய் விட்டாலும் எங்கள் நினைவுகளில் என்றும் வாழும் பாசக்கார சுந்தரர். அப்பப்போ சமைத்து சாப்பிட்டாலும் மதிய உணவு பெரும்பாலும் வெளியே தான்.
அந்த நாட்களில் உணவகத்தில் பணியில் இருந்த ஒரு சிறுவன் எங்களுக்காக தன் இரு சக்கர வாகனத்தை அழுத்திக் கொண்டு வந்து உணவு தந்து விட்டுச் செல்லும் அன்பு உள்ளத்தை மறக்க முடியாது. சமயத்தில் சுட சுட ஆம்லேட்டுடன். வட்ட முகத்துடன் எப்பொழுதும் புன்னகையுடன் வரும் அந்த அரைக்கால் சட்டை சிறுவன் அன்புக்குப் பாத்திரமானவன். ஓராண்டும் சில மாதங்களுமே தற்காலிக பணியில் இருந்த போதும், என் கல்லூரியிலேயே... என் துறையிலேயே... என் பேராசிரியர்களிடையே... என் தோழிகளுடனேயே...மீண்டும் ஒரு அழகான கல்லூரி காலம்.இந்த இரண்டாம் வாய்ப்பை எனக்கு அளித்து, வீட்டுக்குள் முடங்க இருந்த என்னை இழுத்து வந்து பணியில் ஈடுபட வைத்த பெருமை,இன்றைய நாட்டிய மங்கையான என் கண்ணழகிக்கே போய் சேரும். அதற்காக இப்பொழுதும் நன்றி சொல்கிறேன் என் தோழியே. அந்த பணியையும் திருமணம் கருதி விட நேர்ந்தது. ஏம்மா உன் வருங்கால கணவர் வாங்கிய பட்டம் போதுமா என அவரின் பெயருக்கு பின் நீ...ண்...ட எழுத்துக்களைப் பார்த்து என்னுடைய பிரிவு உபசார நிகழ்வில் சொல்லிச் சிரித்தவர் அப்போதைய நம் துறையின் தலைவர்.சந்தன குங்கும பொட்டுக்கு சொந்தக்காரரான ராஜ் அவர்கள்.
அதன் பிறகு நீண்ட ஒரு இடைவெளி நட்புக்குள். பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி.எங்கள் கல்லூரி வளாகத்திலேயே. அருமை! ஒரு கலவையான மகிழ்ச்சி. சந்தோஷம். மீண்டும் சில ஒன்று கூடல்கள் சென்னையில். ஒருமுறை நவரச திலகம் வீட்டில். மறுமுறை கண்ணழகியின் வீட்டில். இப்படித்தான் அப்பப்போ நட்பு வளர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் இந்த சில காலமாக புலனத்தின் புண்ணியத்தால் நம் அனைவருக்குமான நட்பு வலுப்பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும். ஒன்றாகவே இருந்த காலங்களில் கூட பேசாத தோழமைகள் புலனத்தின் வழி நட்பு பாராட்டுகிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கு இன்னுமொரு பாசக்கார தம்பி கிடைத்ததும் என் பாசத்திற்கு கிடைத்த பரிசு. குடும்பமாக உறவு வளர்க்கிறோம். குழந்தைகள் மூலம் பாசம் காண்பிக்கிறோம். இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிறோம். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் (நிழற்) படம் போட்டு காண்பித்து மகிழ்ந்து போகிறோம். நிறைய சண்டையும் போட்டுக் கொள்கிறோம். படிக்கும் போது தெரியாத பக்கங்கள்(தோழர்களின்)எல்லாம் இப்போ பார்க்காமலேயே தெரிந்து கொள்கிறோம். ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் இருந்த போதும் முட்டி மோதிக் கொள்கிறோம். முனங்கினாலும் முடிவில் சமாதானப் புறாக்களாகி நம் நட்பை வளர்க்கிறோம். இந்த புலனத்திலும் கூட சில தோழமைகள் மறுமொழியோ , எதிர்வினையோ காட்டாமல் இருந்தாலும் அவர்களும் நம்முடனே பயணிப்பது போன்ற உணர்வை அடைகிறோம். இன்னும் சில பேர் தொடர்பில் இல்லாது போனாலும், இருப்பவர் அனைவரும் இன்று வரை இயன்றவரை அவர்களையும் இணைக்க முயல்கிறோம். பல தோழமைகளின் வளர்ச்சி,உயர்வு, வெற்றி... கண்டு மனதார மகிழ்ந்து போகிறோம். சில தோழமைகளின் மாற்றம் கண்டு வியந்து போகிறோம். அவன் என் தோழன், அவள் என் தோழி எனச் சொல்லி பெருமை கொள்கிறோம். மொத்தத்தில் இதையும் ஒரு குடும்பமாக்கி கொண்டாடுகிறோம். இழக்க கூடாத வயதில் மூவரை இழந்து விட்டோம். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராய்த்திப்பதோடு, இந்த நட்பு நீண்ட நெடுந்தூரம் அனைவரின் ஆதரவோடும் பயணிக்க, இறையை வேண்டுவோம். உள்ள வரை நம் நட்பை உயிர்ப்போடு வைத்திருப்போம். காலம் கை கொடுக்கும். நாமும் கை கோர்ப்போம். இனிய இருபது இருபதின் புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களில் ஒருத்தி...👍🤝😍🙏