காணனுபவம் - பிஞ்சர்
"பிஞ்சர்” - அம்ருதா ப்ரீதம்
ஒரு நல்ல கிளாஸிக் நாவல் வாசித்தது போல் மனம் விகாசமடைந்திருந்தது “பிஞ்சர்” பார்த்து முடித்ததும். நெகிழ்ந்தும், பரவசமாகியுமிருந்தேன். பாலாவுக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசித்து, நேரம் நள்ளிரவு தாண்டியிருந்ததால், வாட்ஸ்அப்பில் இரண்டு வரிகள் ”பிஞ்சர்” பற்றி டைப் செய்து அனுப்பிவிட்டு, கிச்சனில் போய் டீ போட்டுக்கொண்டு, கப்புடன் வாசல் கதவு திறந்து வெளியில் வந்தபோது, பௌர்ணமியின் நிலா வெளிச்சம் மென்குளிரோடு கவிந்திருந்தது. கென்யாவின் பிப்ரவரி காற்று சத்தத்துடன் வீசிக்கொண்டிருந்தது.
ஜனவரி 25-ல் ஆரம்பித்து கடந்த பத்து நாட்களின் காதலர் தின ஏற்றுமதி பணிச்சுமைகளை “பிஞ்சர்” துடைத்து எறிந்துவிட்டிருந்தது. ஒரு நல்ல நாவலோ அல்லது நல்ல படமோ மனதை எத்தனை தூயதாக்குகிறது!. பேச்சினிடையே நல்ல நாவலிலோ, படத்திலோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காட்சி பற்றி பேசும்போது பாலா அடிக்கடி சொல்வார் “I was really moved"; உண்மைதான் இல்லையா?; நல்ல நாவலும், நல்ல படங்களும் மனதை நகர்த்தித்தான் விடுகின்றன. “எது எனக்கு நல்ல படம்? எதை நல்ல படமாய் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்?” என்று யோசித்தபோது, ஒரு காட்சியாவது மனதை தொட்டிருந்தாலோ, முடித்ததும் மனம் பரவசத்திற்கு எழுந்திருந்தாலோ, இதுமாதிரி முடிந்தபின் நள்ளிரவு தாண்டியும் மனம் தரையிறங்காமல் அவ்வாழ்வு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாலோ...என்றுதான் தோன்றியது. ”“பிஞ்சர்” பாருங்க வெங்கி” என்று பேச்சினூடே, யதேச்சையாய் பாலா சொன்ன அந்த நிமிடம் நல்நிமிடம் என்றுதான் நினைக்கிறேன். இல்லையென்றால் பதினான்கு வருடங்களுக்கு முன்வந்த “பிஞ்சர்”-ஐ நானாக தேடிக் கண்டடைந்து பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.
“பிஞ்சர்” பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு கிளாஸிக் நாவல் படிப்பது போன்று தோன்றிக்கொண்டேயிருந்தது ஏன் என்று பின்னர்தான் தெரிந்தது. ”பிஞ்சர்” அம்ருதா ப்ரீதமின் பஞ்சாபி நாவல். தெரிந்ததும் அம்ருதாவின் மேல் பெரும் மரியாதை உண்டானது. 1947 இந்தியப் பிரிவினை சமயத்தில், பஞ்சாப் எல்லையோர கிராமப்புரத்தில் நடக்கும் நிகழ்வுகள் சில. கதைச்சுருக்கமெல்லாம் வேண்டாமென்றுதான் நினைக்கிறேன். மூன்று மணி நேரம் காட்சிகளாலும், பாத்திரங்களோடும், பஞ்சாபின் அக்கிராமங்களில் வாழ்ந்திருந்தேன். அக்கிராமங்களின் வீடுகள் (கதவுகள், வாசல்கள், சுவர்கள்), தெருக்கள், வயல்கள், மண்பாதைகள், மனிதர்கள் எல்லோரும் மனதில் அழுத்தமாய் பதிந்து போனார்கள். கலை இயக்குநர் முனிஷ் சப்பலையும், இயக்குநர் த்விவேதியையும், மனோஜ் பாஜ்பாயையும் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. குறிப்பாய் மனோஜ் பாஜ்பாய். ரஷீதாய், மனோஜின் உடல்மொழியும், முக பாவனைகளும், கண்களும்...அபாரமான கலைஞன்.
ஒரு காட்சி... ரஷீத், ஒரு இந்துக் குடும்பத்தின் “புரு”-வைக் கடத்தி வந்து திருமணம் செய்துகொள்கிறான் (முன்பகை காரணமாக, புருவைக் கடத்த மட்டுமே சொல்லியிருப்பார்கள் அவன் வீட்டினர். ஆனால் புருவின் மேல் காதல் கொள்ளும் ரஷீத் வீட்டினரை எதிர்த்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்). தங்கையைக் கடத்தியது யாரென்று தெரியாமல், திரிலோக் வெகுநாட்கள் தேடி முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, அதே நாளில் பக்கத்து முஸ்லிம் பெரும்பான்மை கிராமத்தில் ரஷீத் என்பவனும் காணாமல் போனதாக அவனுக்கு செய்தி வருகிறது. கோபத்தில், மனைவி லாஜ்ஜோவுடன் அக்கிராமத்திற்கு போயிருக்கும்போது (லாஜ்ஜோவின் அண்ணன் ராம்சந்திற்குத்தான் புருவை திருமண நிச்சயம் செய்திருந்தது), இரவில் ரஷீதின் வயலுக்குப் போய், பெட்ரோல் ஊற்றி தீவைத்து விடுகிறான். மறுநாள் காலை வேறு கிராமத்திலிருக்கும் ரஷீதிற்கு வயல் எரிந்துபோன செய்தி வருகிறது. பதட்டத்துடன் கிளம்பி வருகிறான். சாம்பலாய்ப் போன வயலில் மடங்கி உட்கார்ந்து, சாம்பலைக் கையில் அள்ளிப் பார்த்து அழுகிறான். அந்தக் காட்சி...அந்த அழுகை...அந்தக் கிராமத்து விவசாயியின் துக்கம்...பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்களில் நீர் துளிர்த்தது. வயலில் கயிற்றுக்கட்டில் மேல் உட்கார்ந்துகொண்டு விசாரிக்கும் போலீஸ் முன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து தோள்துண்டை எடுத்து கண்கள் ஒற்றிக்கொண்டு அழுகையை அடக்கிக்கொள்கிறான். போலீஸ் “யார் மேலாவது உனக்குச் சந்தேகமா?” என்று கேட்கிறார். “இல்லை” என்கிறான். பக்கத்திலிருக்கும் பெரியவர்கள் “சந்தேகமிருந்தால் சொல்லிவிடு” என்கின்றனர். மறுபடியும் இல்லை என்று தலையசைக்கிறான். வீட்டிற்கு வந்ததும், வீட்டாட்கள், புருவின் அண்ணன்தான் கிராமத்திற்கு வந்துபோனதாகவும், அவன்தான் தீவைத்திருக்கவேண்டும் என்று சந்தேகப்படுவதாகவும் சொல்லி, போலீஸிடம் இதை சொல்லிவிடலாமா என்கின்றனர். தேவையில்லாமல் மதக்கலவரம் வருமென்றும், தங்கையைக் கடத்திப் போன கோபத்தில் திரிலோக் செய்திருப்பான் என்றும், யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும் என்கிறான் உடல் முழுதும், முகத்திலும் துக்கம் வழிந்தோடும் ரஷீத்.
மற்றொரு காட்சி... பிரிவினைக் கலவரத்தின்போது, ராம்சந்தின் தங்கை லாஜ்ஜோவை, ஒரு முஸ்லீம் இளைஞன் தூக்கிச் சென்றுவிடுகிறான். கேம்ப்பில் தங்கியிருக்கும்போது, புருவைச் சந்திக்கும் ராம்சந்த், லாஜ்ஜோ அவர்கள் கிராமத்தில்தான் எங்கேனும் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், தான் அக்கிராமத்திற்குள் வரமுடியாதென்றும், எப்படியாவது லாஜ்ஜோவை கண்டுபிடித்து தகவல் சொல்லுமாறும் கேட்கிறான். புருவும், ரஷீதும் தேடுகிறார்கள். புரு, துணி விற்பதுபோல் வீடு வீடாகச் சென்று எங்கேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாளா என்று தேடுகிறாள்; லாஜ்ஜோ வைக்கப்பட்டிருக்கும் வீட்டை கண்டுபிடித்தும் விடுகிறாள்; ரஷீதிடம் சொல்லி, ஒரு இரவில் லாஜ்ஜோவை காப்பாற்றி, வீட்டில் மறைத்து வைக்கிறார்கள். வீட்டினுள் புருவும், லாஜ்ஜோவும் பேசிக்கொண்டிருக்க ரஷீத் வெளியில் படுத்திருக்கிறான். அவர்கள் பேசுவது காதில் விழுகிறது. “இன்னும் என் அண்ணனை நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று லாஜ்ஜோ புருவிடம் கேட்கிறாள். புரு என்ன சொல்லப் போகிறாள் என்று ரஷீத் கூர்ந்து கவனிக்கிறான். இக்காட்சியில் ரஷீதின் முகமொழி... இறுதிக்காட்சியில், ராம்சந்த்திடம் ஒப்படைக்க, கேம்பிற்கு லாஜ்ஜோவை கூட்டி வருகிறான் ரஷீத் (கேம்ப்பிலிருந்து இந்தியாவிற்கு பேருந்து செல்கிறது). கூடவே புருவையும்; புருவும் அவள் அண்ணணைப் பார்க்கட்டும் என்று. புருவும், திரிலோக்கும், சந்திக்கும் அக்காட்சி...; ரஷீதையும், திரிலோக் முதன்முதலாய் பார்க்கிறான். திரிலோக், தங்கை புருவிடம் “நான் சொல்வதைக் கேள்; நீயும் எங்களோடு இந்தியா வந்துவிடு; இப்போதும் உன்னை திருமணம் செய்துகொள்ள ராம்சந்த்திற்கு சம்மதம்தான். நாம் எல்லோரும் ஒன்றாய் இருக்கலாம்” என்கிறான். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ரஷீத் அங்கிருந்து விலகிப் போய்விடுகிறான். புரு அதிர்ச்சியாகி, இல்லையென்று மெல்லத் தலையசத்துவிட்டு, பின்னால் திரும்பி ரஷீதைப் பார்க்க, அவனைக் காணாமல் கலங்கிப்போய் பதைபதத்து, கேம்ப் முழுவதும் “ரஷீத்...ரஷீத்...” என்று கூப்பிட்டுக்கொண்டே தேடி ஓடுகிறாள். புருவைக் காதலிக்கும் ரஷீதும், ரஷீதைப் புரிந்துகொண்ட அன்பின் புருவும் அழுகையினூடே சந்திக்கும் அக்கணத்தைக் கண்டபோது மனம் கரைந்து எழுந்தது.
“பிஞ்சர்” பார்த்தது நல் அனுபவமாக அமைந்தது. “பிஞ்சர்” என்னுள்ளில் நிகழ்ந்தது; “பிஞ்சர்”-ல் நான் இருந்தேன்.