சமையல் அனுபவங்கள்

From HORTS 1993
Jump to navigation Jump to search

1. கம்பு சேமியா

இந்தமுறை ஊரிலிருந்து வரும்போது சமையல் சாமான்களோடு கம்பு சேமியா, ராகி சேமியா பாக்கெட்டுகளும் மல்லிகா கொடுத்தனுப்பியிருந்தது. அரிசி சாதம் அடிக்கடி சாப்பிடவேண்டாமென்றும், கம்பு ராகி கோதுமை சம அளவில் கலந்து, கால் பங்கு உளுந்தும் சேர்த்து இரவு ஊறவைத்து மறுநாள் மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொண்டு தோசை ஊற்றி சாப்பிடுமாறு அறிவுறுத்தியிருந்தது.

சென்றவார விடுமுறையில் மதிய உணவுக்கு பின் குட்டித்தூக்கம் போட்டு எழுந்து முகம் கழுவி டீ போட்டு குடித்தபின், இரவுணவிற்கு கம்பு சேமியா செய்யலாம் என்று முடிவுசெய்து, கைபேசியில் சுதாவின் “குறையொன்றுமில்லை”-யை பாடவிட்டு “மறைமூர்த்தி கண்ணா”-வை ஹம் செய்துகொண்டு சமையலறையில் நுழைந்தேன்.

சேமியா பாக்கெட்டுகளை எங்கு வைத்தேன் என்று மறந்துவிட்டிருந்தது. சமையல் மேடையின் கீழிருந்த அலமாரிகளிலும், பின் சுவரிலிருந்த இரண்டு உயர அலமாரிகளில் சேர்போட்டு மேலேறியும் தேடினேன்; கிடைக்கவில்லை. குளிர்சாதன பெட்டிக்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்து யோசித்தபோது “ஒருவேளை பயணப்பையிலிருந்தே எடுக்கவில்லையோ?” சந்தேகம் வந்து படுக்கை அறை சென்று பயணப்பையை கீழிறக்கி திறந்து பார்க்க உள்ளே இருந்தது.

ஐ.எம்.ஓ-வில் மல்லிகாவை கூப்பிட்டு “கம்பு சேமியா பண்ணலான்னு இருக்கேன்; எப்படி பண்றது அம்மணி?” என்று கேட்க “அதான் பாக்கெட்டிலேயே செய்முறை போட்டிருக்குமே?; ஒருதடவை படிங்க; ஏதேனும் சந்தேகம் வந்தா கேளுங்க” என்றது மல்லிகா. பாக்கெட்டில் செய்முறை தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. படித்துவிட்டு, சேமியாவை ஒருநிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி, இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி மேலே பரப்பினேன். மூன்று தட்டுகள் வந்தது. குக்கர் அடியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டுகள் எடுத்து குக்கர் உள்ளே வைக்க முயற்சிக்க, தட்டு உள்ளேயே போகவில்லை. இருப்பது இரண்டே குக்கர்கள்; இரண்டும் ஒரே அளவு. ‘என்ன செய்வது இப்போது...எப்படி ஆவியில் வேகவைப்பது...’ யோசித்துவிட்டு மறுபடியும் மல்லிகாவுக்கு ஃபோன் செய்தேன். “இட்லி தட்டு குக்கருக்குள்ள போகமாட்டேங்குது அம்மணி” என்றேன். “அந்த இட்லி தட்டு குக்கருக்குள்ள போகாது. அதுக்கு தனி பாத்திரமிருக்கு. கேஸ் ஸ்டவ் மேடைக்கு கீழே இரண்டாவது அலமாரியில் மேல்தட்டுல பின்னடி இருக்கும் பாருங்க” என்றது மல்லிகா; “அதுல அடியில ஒரு கோடு இருக்கும்; அதுவரைக்கும் தண்ணி ஊத்தணும்” என்றும் சொன்னது.

தேடி எடுக்க, ஏழு மாதம் உபயோகிக்காமல் கிடந்ததால் தூசி படிந்திருந்தது. தேய்த்து கழுவி, அடிக்கோடுவரை தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டுகள் வைத்துவிட்டு, அப்பளம் பொரித்த வாணலியில் என்ணெய் மூடி வைத்திருந்த இட்லி பாத்திரத்தின் மூடி எடுத்து மூடி ஸ்டவ்வை ஆன் செய்தேன். மல்லிகா பத்துநிமிடம் வேகவைக்க சொல்லியிருந்தது. மணி பார்த்துவிட்டு, பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தபோது, ஆறு நிமிடங்களில் பாத்திரம் விசிலடிக்க ஆரம்பித்தது. மூடி மேல்துளை வழியாக ஆவி வந்தது. இறக்கிவிடலாமா என்று யோசித்து வேகவில்லையென்றால் மறுபடி வைக்கவேண்டுமே என்று பத்துநிமிடம் ஆகட்டும் என்று காத்திருக்க விசில் சத்தம் அதிகமாகி சுதாவின் “பிரம்மம் ஒகடே”-வை அமுக்கியது. பத்தாவது நிமிடம் ஆரம்பித்தபோது படீரென்று சத்தம் வந்தது; பயந்துபோய் மேடைவிட்டு விலக, இட்லி பாத்திரத்தின் மூடி பறந்துபோய் சமையலறை மூலையில் விழுந்தது. “சிவசம்போ...சுயம்போ...” சுதா நிஷாதத்திலா; இதய படபடப்பு அடங்க இரண்டு நிமிடமானது.

சேமியா வெந்திருந்தது. எண்ணெயில் உளுந்துபோட்டு, வெங்காயம் நறுக்கி சேர்த்து தாளித்து, சேமியாவை கொட்டி கிளறி ஒருவழியாய் இரவுணவை சாப்பிட்டு முடித்தேன். யுட்யூபில் விக்ரமனின் “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு படுக்கப்போனேன். கனவில் எஸ் ஏ ராஜ்குமாரின் கோரஸ் பெண்களின் ஹம்மிங் பிஜிஎம்மோடு இட்லி பாத்திரம் எங்கோ பறந்துபோய்க்கொண்டிருந்தது.