தியாகு புத்தக சன்னதியில் ஒரு நாள்

From HORTS 1993
Jump to navigation Jump to search

சுங்கத்தில் இறங்கியதும் மரத்தடி நிழலில் கரும்பு ஜூஸ் குடித்தேன். மல்லிகாவும் இயலும் இளநீர் குடித்தார்கள். அங்கிருந்து 1C-யில் ஏறி லாலி ரோட்டில் இறங்கி ஆட்டோ பிடித்தோம். ஐந்து நிமிடத்தில் தியாகு புக் செண்டர் முன் இறக்கிவிட்டார்.

முதல் தளத்திலிருந்தது. படியேறி மேலேபோக கதவு சாத்தியிருந்தது. பதினோரு மணிக்கு வந்துவிடுவதாய் கதவில் தாள் ஒட்டியிருந்தது. வியர்த்து ஊற்றியதால் டீசர்ட்டை கழற்றி உடம்பு துடைத்துக்கொண்டிருந்தபோது சுரேஷ் படியேறி வந்தார். சொல்புதிது குழுமம் மூலமும், முகநூல் வழியாகவும் ஏற்கனவே பரிச்சயமாகியிருந்தார். ஒருவாரம் முன்பு காந்திபுரம் ஜெ புதுவாசகர் சந்திப்பில் முதல்முறையாக பார்த்திருந்தேன். சொல்வனத்தில் கட்டுரைகளும் விமர்சனமும் எழுதுபவர். நன்றாக பாடுவார். அவர் பெண்ணும் மிகச்சிறந்த பாடகி. புதூரில் வசிக்கிறார். ஜெ-வின் வெண்முரசை விடாமல் தொடர்பவர். சிறந்த விமர்சகர்.

கதவின் அறிவிப்பு தாளிலிருந்த நேரத்திற்கு சரியாய் தியாகு வந்தார். முதன்முதலாய் அவரை சந்திக்கிறேன். அறிமுகம் செய்துகொண்டு உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவ்வளவு புத்தகங்கள் பார்த்ததும் மனது ஒரு மிதப்பிற்கு போனது. வேளாண் கல்லூரியில் படித்தபோதே (89-93), தியாகு புத்தக நிலையம் இருந்திருக்கிறது; நான்கு வருடங்கள் இது தெரியாமலே கடந்தது மிகவும் வருத்தமாயிருந்தது.

சனிக்கிழமையானதால், சங்கமத்திற்கு நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்துகொண்டிருந்தனர். க்விஸ் செந்தில், விஜய் சூரியன், சிவா...சிவாவை ஒருமுறை திருப்பூர் புத்தக கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன்; தமிழினி அரங்கில் வசந்தகுமார் சாரோடு பேசிக்கொண்டிருக்கும்போது.

விவாதங்கள் இயல்பாய் ஒன்றுதொட்டு ஒன்று தொடர்ந்து நடந்தது. தியாகு சார் இடையிடையில் சாப்பிட ஏதேனும் கொடுத்துக்கொண்டேயிருந்தார். பொள்ளாச்சியில் இயற்கை வேளாண் பண்ணை வைத்திருக்கும் கண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தார். அவர் குட்டிப்பெண் திருப்புகழில் அருமையாய் ஒரு பாடல் பாடினார். கண்ணன் வேளாண்மையின் மீதான காதலால் சென்னை வேலையை விட்டுவந்து பொள்ளாச்சியில் பண்ணை ஆரம்பித்திருக்கிறார். பயிலகம் நடத்துகிறார். சமீபத்தில் சுரேஷ் எழுதியிருந்த வெண்முரசின் விமர்சன கட்டுரைக்கு ஏன் குறிப்பிடத்தகுந்த எதிர்வினைகள் வரவில்லை என்ற விவாதம் சூடுபறந்தது.

சிவா சமீபத்தைய திருமணங்களில் நடக்கும் போட்டோ செஸ்ஸன் அலும்புகள் தாங்க முடியவில்லை என்றார். வெண்முரசின் அன்றைய அத்தியாயம் பற்றியும் விவாதம் வந்தது.

மிளிர்கல் முருகவேலும், எஸ்.ரா-வும் வருவதாய் தியாகு சாருக்கு போன் வந்தது. எஸ்.ரா. அன்று காலை வேளாண் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார். மாலை ஃபாரஸ்ட்ரி கல்லூரியில் அவருக்கு இன்னொரு நிகழ்விருந்தது. எஸ்.ரா. வந்தால் பாதியில் கிளம்பமுடியாதென்று சுரேஷ் அவசரமாய் அலுவலகம் கிளம்பினார்.

எதிர்பாராமல் எஸ்.ரா.-வை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாக இருந்தது. அவரின் நெடுங்குருதி என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல்; குறிப்பாய் வேம்பலையின் வெயில். கோடையின் வெயில் பற்றியும், பதிப்பக தொழில் பற்றியும், புது எழுத்தாளர்களின் மனநிலை பற்றியும் பேசினார்.

மாலை நெருங்கும்வரை மதிய உணவு சாப்பிடவில்லை. எஸ்.ரா.-வும், முருகவேளும் கண்ணன் வண்டியில் கிளம்பி சென்றார்கள். வீரகேரளம் போகவேண்டியிருந்ததால், செந்தில் போன்செய்து பெஸ்ட் கேபில் வண்டி ஏற்பாடு செய்துதந்துவிட்டு போனார். தியாகு சார் கீழிறங்கி கேட்வரை வந்து வழியனுப்பினார்.

மகிழ்ச்சியான மனம்நிறைந்த ஒரு நாள்.