மார்க்ஸ்
ஒரு மகத்தான சிந்தனையாளர் பற்றி... நான் அறிந்து கொண்டிருக்கிற ...என்னை பாதித்த சில சிந்தனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழர்களே.
ஆமாம் நான் குறிப்பிட்டது மார்க்ஸ் ஐத் தான். கார்ல் மார்க்ஸ் எனும் மாமனிதனைப் பற்றித் தான். முசு முசு வென்ற முடிக்குள், மூளையையே அதிகம் பயன்படுத்திய சிந்தனையாளனைப் பற்றித் தான். அவருக்கு நாடற்றவர் என்ற பெயருண்டாம். பொருத்தமான பெயர் தான். உலகைப் பற்றி சிந்திப்பவனை எப்படி நாட்டுக்குள் அடக்கி விட முடியும்...? முடியாது. அந்த நாடற்றவன் நாத்திகனாகவும் இருந்திருக்கிறான். காரணம் சதா மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் தெய்வம் பற்றி யோசிப்பதை தவிர்த்து இருக்கலாம்.
புருசியா பெற்றெடுத்த பெரும் சிந்தனையாளர். யூத குலத் தோன்றலான போதும், பின்னாளில் கிறிஸ்துவத்தை தழுவிய குடும்பத்து வாரிசு. ஆயிரத்து எண்ணூற்றி பதினெட்டில் பிறந்த மார்க்ஸ், சோபியா என்ற மூத்த சகோதரியோடு இரண்டு இளைய சகோதரிகளையும் பெற்றவர். ஒன்பதில் இந்த நான்கு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர். வக்கீலான தந்தையுடனும், கண்டிப்பான அதே நேரத்தில் மிகவும் அன்பான , தன் தாயாருடனும் அதிக பாசம் வைத்தவர். இருப்பினும் தந்தை ஒருபடி உயர்ந்தே இருந்தார் மார்க்சின் மனதில். எனவே தான் மார்க்சின் சட்டைப் பையில், தந்தையின் புகைப்படம் எப்பொழுதும் இருக்குமாம்.
ஹெஹல்யவாதியாய்... 'மாற்றம்' என்ற வார்த்தையில் தொடங்கியது தான் கார்லின் சிந்தனை. 'மாறிக் கொண்டே இருக்கும்' என்ற தத்துவஞானி ஹெகெலின் வரிகளில் எங்கோ மாறுபட தொடங்கினார் மார்க்ஸ். தேடல் தொடர்ந்தது.
மனித குல வரலாற்றின் மாற்றங்களுக்கு, மனித உழைப்பின் காரணங்களை ஆராய்ந்தார். உழைப்பின் மதிப்பில் பேதங்கள் இல்லாதவரை பிரச்சினைகள் கிடையாது என்பதறிந்தார். மிஞ்சிய 'உபரிமதிப்பு' மீண்டும் மூலதனமாகும் போது, வர்க்கபேதம் உருவாவதை உணர்ந்தார்... உலகுக்கு உணர்த்தினார்.
வறுமை வாட்டி எடுத்த போதும், மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்து கொண்டு இருந்தார். எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படி தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்தித்து கொண்டிருந்த வேளையில், உலகத்தை மாற்றி அமைப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பெரும் சிந்தனையாளன் மார்க்ஸ்.
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை.ஆனால் உங்களுக்காக ஒரு பொன்னான உலகம் காத்திருக்கிறது என கூறி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த புரட்சியாளர்.
'மூலதனம்' என்னும் ஒரு மிகப்பெரிய மூலதனத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு கொடுக்க அவர் கொடுத்த 'விலை ' அளவிடமுடியாதது. இங்கிலாந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தில்,ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணி நேரம் உழைத்து உருவானது தான் மூலதனம். பதினைந்து ஆண்டுகள் உழைப்பு அது. மூலதனமே இல்லாதவன் உருவாக்கிய மிகப் பெரும் பொக்கிஷம் இந்த மூலதனம். மகனின் வறுமை கண்டு வருந்திய மார்க்சின் அன்னை, இந்த மூலதனத்திற்குப் பதிலாக வாழ்க்கைக்கு தேவையான மூலதனத்தை சிறிதளவேனும் சேர்த்து வைத்திருந்தால் குடும்பம் பிழைத்திருக்கும் என தாய்மை உணர்வில் வருத்திக் கூறியதாகக் கூட சொல்லப்படுகிறது.
நாடு நாடாக, நாடு கடத்தப்பட்டாலும் அல்லது துரத்தப்பட்டாலும், அவரின் சிந்தனை ஓட்டம் நிற்க வில்லை. சித்தாந்தம், அறிவியல், பொருளாதாரம் என அதுவும் விரிந்து படர்ந்து கொண்டே சென்றது.
ஒருமுறை வீட்டுப் பொருட்கள் அனைத்தும் ஜப்தி செய்ய பட்டு , கைக்குழந்தையோடு வீதிக்கு வந்த மார்க்ஸ் தம்பதி, இனி இழப்பதற்கு கூட ஒன்றும் இல்லை என்ற நிலையிலும், உழைப்பவர் பற்றி சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளாத கொள்கை கொண்ட பொதுவுடமைவாதிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள்.
மதம் ஒரு அபின். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். என்று குறிப்பிடுகிறார் மார்க்ஸ் அவரின் ஹெகெலிய கோட்பாடு குறித்த திறனாய்வில். வெகு ஜனங்களுக்கான வலி நிவாரணி தான் மதம் என்று குறிப்பிடுகிறார். மதம், இனம்,மொழி அனைத்தையும் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே சிந்தித்த மகத்தானவர்.
ஆயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி எட்டில், வெறும் இருபத்தி நான்கு பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை ஏங்கல்ஸுடன் இணைந்து வெளியிட்டார். அது கிட்டத்தட்ட இருநூறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது. அது தான் 'கம்யூனிச கட்சி அறிக்கை' எனும் புகழ் பெற்ற பொதுவுடைமை அறிக்கை. எக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய கம்யூனிசத்தின் ஆவணமாக விளங்குகிறது.
மார்க்ஸ் பற்றி நினைத்தால், ஜென்னியும், ஏங்கல்ஸூம் அவருக்கும் முன்னால் நம் நினைவை நிறைப்பர். காரலின் ஒரு கரம் காதலுக்கானது என்றால் , மறுகரம் அவரின் நட்புக்கானது. இந்த இரண்டும் தான் கார்ல் என்ற மாபெரும் புரட்சியாளனை, சிந்தனையாளனை இவ்வுலகிற்கு வழங்கிய மிக உயர்ந்த இதயங்கள்.
ஜென்னி - அழகான,அறிவிற்சிறந்த பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்த மகள். காரலின் சிந்தனை தான் அவளையும் ஈர்த்தது. நான்கு வயது முந்திப் பிறந்த போதும், காதல் ஜெயித்தது. சிந்தனையாளனுக்கு அறிவுத்துணையாய் இருப்பேன் என உறுதி எடுத்துக் கொண்டவள். புரட்சி கொண்ட மனதில், காதலும் கவிதையும் பிறக்க காரணமாகியவள். நீ குழந்தையாய் இருந்த காலந்தொட்டே உன்னை அறிவேனடா எனச் சொல்லி, தாயன்பையும் காதலில் கரைத்துக் கொடுத்தவள். ஒன்பது மொழிகள் அறிந்தவளாதலால், அவனின் சிந்தனைகளை மொழிமாற்றம் செய்யவும் பேருதவியாய் இருந்தவள். இசையும் ஓவியமும் கூட அவளிடத்தில் இணைந்தே இருந்தனவாம். கலையும் காதலும் ஒருங்கே கூடியிருந்ததனாலோ என்னவோ பொறுமையும், சகிப்புத்தன்மையும் இறுதி வரை அவள் உடன் இருந்தன.
காதல் கணவனுடனான காதலில் ஏழு குழந்தைகளைப் பெற்று, வறுமைக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்து, இறுதியில் மூன்று பெண் பிள்ளைகளை மட்டும் வறுமைக்கு பயந்து, பாதுகாத்து வளர்த்து வந்தவள்.
வறுமை அவள் மார் வழியே இரத்தமாக வெளியேறிய போதும், கணவனின் சிந்தனையை சிறிதும் சலனப்படுத்தாதவள். பால் என்ற உணர்வில், கரு விட்டு வெளியேறிய பிறகும்,குழந்தை குருதி குடித்த நிமிடங்களை, அதன் வலியை, தனக்குள்ளேயே புதைத்தவள்.
பிறந்த குழந்தைக்கு தொட்டிலுக்கும் வழியில்லை. இறந்து போய்விட்ட பிறகும் சவப்பெட்டிக்கும் காசு இல்லை என்ற நிலையிலும் காதல் வாழ்க்கையை, காரலுடன் தொடர்ந்தவள்.
காதல் துளிர் விட்டு ,ஏழு ஆண்டுகள் காத்திருந்து, கைபிடித்து கடைசி மூச்சுவரை கிட்டத்தட்ட முப்பத்தெட்டு ஆண்டுகள் கதலையும் வாழ வைத்து, காரலையும் வாழ வைத்த, வறுமையிலும் அவன் சிந்தனைக்கு துணை நின்ற மகா மனுஷி அவள்.
பிரெட்ரிக் ஏங்கல்ஸ் - இதயப்பூர்வமான நட்பு. ஒருமித்த சிந்தனையாளர்கள். அந்த சிந்தனையே நட்பு வளர்த்தது. முதல் சந்திப்பு பாரிஸு நகரில். முதல் சந்திப்பே பத்து தினங்களையும் கடந்து சென்றது. பிறகு அந்த சந்திப்பு நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து சென்றது. வசதியில் ஓரளவு உயர்ந்த ஏங்கல்ஸ், மார்க்ஸின் வறுமையை துடைக்க, முடிந்த வரை, தன் வாழ்வு முடியும் வரை முயன்றார். உழைப்பவர்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரலின் குடும்பத்திற்காக உழைத்த உயர்ந்த உன்னத நட்பு ஏங்கல்ஸ்யுடையது. ஆங்கிலம் அறியாத காரலின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்த நட்பு , ஒரு கட்டத்தில் தானே எழுதி அதை காரலின் பெயரில் அச்சிட்டு சம்பாதித்து கொடுத்த உறவு ஏங்கல்ஸ்யுடையது.
ஓராண்டு, ஈராண்டல்ல ...இருபது ஆண்டுகள் நண்பனுக்காக உழைத்த நட்பு ஏங்கல்ஸ்யுடையது. எந்த வகையிலும் மார்க்சின் சிந்தனை சிதறக் கூடாது என சினேகிதனின் மகத்தான சிந்தனைக்கு துணை போன தூய நட்பு ஏங்கல்ஸ்யுடையது.
ஜென்னியின் மறைவு மார்க்சை நடைப் பிணமாக்கியது. அடுத்த சில காலங்களிலே மூத்த மகளின் மறைவு மார்க்சை முழுவதுமாக முடக்கி போட்டது. மூச்சு குழாய் அழற்சி நோயால் அவதிப் பட்டார். காதல் மனைவியின் இழப்பிற்கு பிறகு சரியாக பதினைந்து மாதங்கள் கழித்து நிரந்தரமாக அயர்ந்து போனார்.
மார்க்சின் மறைவு காலம் கடந்தும் காலமாக மாறி நிற்கிறது. சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டான் என்று தன் நட்பின் மீளாப் பிரிவிற்கு மரியாதை செய்தார் ஏங்கல்ஸ். இன்று உலகமே கொண்டாடும் மார்க்சின் இறுதிச் சடங்கில் எண்ணி பதினொரு பேர் தான் இருந்தனர்.
அது ஏனோ என் கவிஞன் பாரதிக்கும் இப்படித்தான் இருபதுக்குள்ளே தான் முடிந்து போனது இறுதி யாத்திரை. உலகை சிந்திப்பவர்களை, உலகம் சிந்திப்பதில்லையோ என்று கூட சிந்திக்க வைக்கிறது. அவனும் வறுமையின் அடையாளமாகத் தான் வாழ்ந்தான். ஆனால் இவர்கள் இருவருமே மனித குல வரலாற்றில் மறையப் போவதில்லை. காலத்தால் நிலைத்து நிற்கும் மாமனிதர்கள்.
வடபகுதி லண்டனில் உள்ள ஹைஹேட்ஸ் கல்லறையில் ஜென்னிக்கு அருகிலேயே தான் காதல் உறக்கத்தில், மூலதனத்தையும் புரட்டி கொண்டு உள்ளார் மார்க்ஸ்.
அத்தனை காதல் காவியங்களையும் , வென்று மார்க்ஸ் ஜென்னியின் காதல் சரித்திரம் படைத்துள்ளது. இருவரும் காதல் உறக்கத்தில் உள்ளனர்.
மூலதனம் முதல் பாகம் மட்டுமே வெளி வந்த நிலையில், கார்ல் காதலுடன் துயில் கொண்டதால், இரண்டாம் பாகம் ஏங்கல்ஸ் என்ற நட்பின் முயற்சியால் , மார்க்சின் காலத்திற்கு பிறகு தான் வெளிவந்திருக்கிறது.
தன் சொத்துக்களையும் நட்பின் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்த ஏங்கல்ஸூம் நட்போடு போய் சேர்ந்தார். அவரின் இறுதி சடங்கில் , மார்க்சின் மகள் எலினா, என் தந்தையின் நிலையில் இருந்தவரையும் இழந்தேன் . இரு மகத்தான மனிதர்கள் மறைந்தனர் என துயருற்றதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகள் உலக வாழ்க்கையில், பெரும்பாண்மையை வறுமைக்கே ஒப்புக் கொடுத்த போதும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே சிந்தித்துக் கொண்டிருந்த இந்த மாபெரும் புரட்சியாளனை என் எழுத்துக்குள் அடக்கி விட முடியாது. அவரின் மிகச் சில பக்கங்களை மட்டுமே முன் வைத்திருக்கிறேன். காரலால் கவரப்பட்ட பல நல்ல இதயங்கள் எடுத்துரைத்ததை, என் எழுத்துக்கள் மூலம் உங்களுக்கு கடத்த முயன்றிருக்கிறேன். குறிப்பாக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது. காரலைப் பற்றி நிறைய கற்க தூண்டியது. படிக்கிறேன்... இன்னமும் படிக்கிறேன். அதற்கு எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏.
காதலும் நட்பும் வளர்த்த ஒரு சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட போதும், காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவனின் சிந்தனை துளிகள் சில உங்கள் சிந்தனைக்கு...
கற்றவர்களிடம் கற்பதை விட,கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள்...!
"என்றும் நினைவில் கொள். மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது"
நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது, நீங்களும் மாற வேண்டும்.
எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனம் என்பதே ஆயுதம். அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விமர்சனம்...!
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது...!
ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதனாகிறான். ஒரு சமுதாயத்திற்காக மக்களுக்காக வாழும் போது அவன் உண்மையான மனிதன் ஆகிறான்...!
இப்படி சொல்லி விட்டு செல்லவில்லை இந்த மனிதன். அப்படியே வாழ்ந்து விட்டுத் தான் சென்றிருக்கிறான்...! மார்க்ஸ்... கார்ல் மார்க்ஸ்... கார்ல் என்ரிச் மார்க்ஸ்... எனும் கம்யூனிஸ்டுகளின் கடவுள்...!
தமிழச்சி கலாவதி அய்யனார்.