முப்பெரும்தேவிகள்
எண்பதுகளில் நாங்கள் தான். வெற்றி மகள்- ஜெயா. திராவிட நிறத்தழகி- சுதா. கலையார்வம் கொண்ட - கலா.
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து பறந்த எங்கள் இளமைகாலம் பொற்காலம். செல்லூர் எங்கள் ஊர்...சிவன் தெருவின் நடுமைய்யத்தில் இருக்கும் அழகிய வீடு....அடிப்படை வசதி குறைந்தேயிருந்தபோதும் எங்களுக்கு அது அரண்மனை. அன்பு வழிந்தோடும் அரண்மனை...சந்தோஷக்காற்று வீசும் சோலை. அந்த மாளிகை தான் எங்கள் மூவருக்குமான ஆரம்ப பள்ளி. கற்க வந்தவர்கள் தான்....கற்றலும் கற்பித்தலும் நடந்து கொண்டே இருந்த போதும் எங்களின் நட்பும் ஒருபக்கம் வளர்ந்து கொண்டே இருந்தது. நிறைய படித்தோம். கணிதம் என்றாலே காத துரம் ஓடும் எங்களையும் தொண்ணூறை தொடவைத்தார் எங்கள் அருமை அண்ணன்.
நாங்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள் போன்ற உணர்வு அப்பொழுதெல்லாம். மனம் முழுக்க மகிழ்ச்சி. வீடு நிறைய சந்தோஷம். எப்பொழுதும் நிறைந்தே இருக்கும் வீடு. அப்பா...அம்மா...அண்ணன்.. அண்ணி...அக்கா ...மாமா...அத்தை..சித்தப்பா ....சித்தி...இப்படி எல்லோரும் பொதுவாகிப்போன நட்பு எங்களுடையது.குடும்பமும் உடன்பிறந்தவர்களும் சுற்றி இருந்த சொந்தங்களும் சேர்த்து வளர்த்தன எங்கள் நட்பை!புரிந்தும் புரியாத பருவம் அது. பதின்பருவத்து தேவதைகளாய் வலம் வருவோம். பாசம் மட்டுமே பார்த்து வளர்ந்த பாசமலர்கள். கல்லூரி காலம் எனைமட்டும் சிறிது தொலைவு படுத்தியது ஆனால் காலம் தான் தோற்றது. அந்த தூரம் எங்கள் நட்பை ஆழப்படுத்தியது. தூர இருந்தே தோழமை கொண்டோம். காலம் கனிந்து கல்யாணமும் முடிந்து எங்கள் காலத்து சரிதா தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மும்பை போனாள். எங்களின் அழகிக்கும் (கல்லிப்பட்டி அழகி), தொண்ணூறுகளின் இறுதியில் எனக்கும், வாழ்வின் மறுபகுதி ஆரம்பமானது.சென்னை...மும்பை...டெல்லி...என வேறு வேறாக பிரித்து போட்டது வாழ்க்கை. வாழ்விடத்தை மட்டும் தான் பிரிக்க முடிந்தது. கடிதம் வாயிலாக நட்பு தொடர்ந்தது.
ஆங்காங்கே சில அமைதி. சில பல வாழ்வின் கடமைகள். இடைவெளி விட்டாலும் நிதானமாக...கூடவே வந்தது எங்களின் நட்பு நிழல் ....எங்களின் பெட்டர் ஹாஃப்களும்....பெஸ்ட் ஹாஃப் களாகிப் போனதால் சுமூகமாகவே வளர்கிறது எங்களின் தூய நட்பு. சரியாக சொல்ல வேண்டுமானால் முப்பத்தைந்து ஆண்டுகள் எங்கள் நட்பின் வயது. இந்த இடைவெளியில் எங்கள் நட்பு புனித உறவாகி ஒரே குடும்பமாய் ஒரு குடையின் நிழலில். மூவரும் பெற்றெடுத்தது ஒன்று ஒன்று தான். மூன்றும் முத்துக்கள். ஒன்று மருத்துவராய் உயர்ந்து நிற்க இன்னொன்றும் மருத்துவத்தையே கையில் எடுத்து எங்களை பெருமைபடுத்தியிருக்கிறாள். மூன்றாவது சில காலம் பொறுத்து வந்ததால் பள்ளி இடைநிலையில் கடைக்குட்டியாய். நாங்கள் மூவரும் தான் படித்தோம். நிறைய படித்தோம். எங்கள் நட்புக்கு பெருமை சேர்த்தாள் எங்கள் வெற்றி நாயகி. அவளும் டாக்டர் தான்...(அவள் பிரிவில்)கல்லூரி பேராசிரியையாய் புணிதமான பணியை கையில் எடுத்து இருக்கிறாள். எங்களை கவுரவப் படுத்துகிறாள்.
வேறு வேறு வாழ்க்கை.. வேறு சூழல்....வேறு பயணம்...கடல் கடந்தும் சில காலம்....இடையே எத்தனை மாற்றங்கள்....எத்தனை உறவுகள்....எத்தனை புதிய சந்திப்புகள்....எத்தனை சந்தோஷங்கள்....எத்தனை துக்கங்கள்...எத்தனை ஆரோக்கிய குறைபாடுகள்....எத்தனை இழப்புகள்.....எல்லாவற்றையும் கடந்து இப்பொழுதும் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் நட்பு. நம் காலம் கடந்தும் பேசப்படும் நம் பிள்ளைகள் வாயிலாக... சினேகிதம் என்று கூட சொல்ல முடியாது... இலேசாகிப் போகும் உச்சரிப்பு... நம்முடையது நட்பு மட்டுமே... அழுத்தமான ஆழமான ....அழகான....நீண்ட ஆயுள் கொண்ட ...உறுதியான ...உணர்வு மிக்கது...எங்கள் ந.....ட்......பு.
எண்பதுகளில் தொடங்கி...தொண்ணூறுகளை கடந்து...இரண்டாயிரங்களிலிலும் இனிதே பயணிக்கிறது.....🙏🙏🙏.
(மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதியது...👆🏼)