வடவள்ளி to சிங்காநல்லூர்

From HORTS 1993
Jump to navigation Jump to search

சென்ற விடுமுறையில் கோவையில் இருந்தபோது, தம்பிகளைப் பார்க்க வீரகேரளம் போயிருந்தோம். தம்பி சத்யன் குடும்பத்தோடு புதூரில் இருந்து, வீரகேரளத்தில் வீடு வாங்கி அங்கு மாறியிருந்தான். தம்பி மூர்த்தியும் பையனுக்கு மருதமலையில் மொட்டை எடுப்பதற்காக திருவண்ணாமலையிலிருந்து சத்யன் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தான்.

அங்கு சென்று ஒரு நாள் இருந்துவிட்டு, மாலை 7 மணிக்கு கிளம்பினோம். சத்யனும், மூர்த்தியும் டூவீலரில் வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் வரை கூட்டிவந்து வழியனுப்பினார்கள்.

மனதில் பதிந்துபோன 1C, 1A பேருந்துகள். ஒரு 1C-யில் ஏறி உட்கார்ந்ததும், இரண்டு நிமிடத்தில் கிளம்பியது. மனது கல்லுரி நாட்களுக்குத் திரும்பி அசைபோட ஆரம்பித்தது. வழியெங்கும் பரிச்சயமான இடங்களை கண்கள் தேடியது. பஸ்ஸில் இளையராஜாவின் எண்பதுகளின் பாட்டுகள் மனதின் நினைவுகளுக்கு சுருதி சேர்த்தது...”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது”...

சத்குருவின் மிருதங்கப் பள்ளி, சிவாவின் ஞாயிறு காலை 10 மணி ஷோ தியேட்டர், பஞ்சமுக ஆஞ்சனேயர், தில்லை நகர் SRS சார் வீடு, புதூர் கோவில்...

செகண்ட் கேட்...கார்டன் ஸ்டாப்...அங்கு கேட்டில் சைக்கிள் நிறுத்திவிட்டு, பார்த்துவிட்ட வந்த சினிமாக்கள், கார்டன் முன்னாலிருக்கும் அந்த மரம் எத்தனை பேரைப் (தலைமுறையை) பார்த்திருக்கும்?

லாலி ரோடு பேக்கரி, பால் கம்பெனி, காந்தி பார்க்...எல்லா இடங்களிலும் சைக்கிளில் சுற்றியது மனதில் ஓடியது.

காந்தி பார்க்கிலிருந்து பஸ் எங்கு நுழைந்ததென்று தெரியவில்லை. எல்லா சந்துகளுக்குள்ளும் புகுந்து திரும்பியது. ஒடுக்கமான சந்துகள். ரோடு ஓரங்களிலெல்லாம் நடைபாதை உணவுக்கடைகள். எல்லாவற்றிலும் மக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். எத்தனை பேக்கரிகள்! தடுக்கி விழுந்தால் பேக்கரி! மெர்க்குரி விளக்கொளிகளிலும், சோடியம் வேப்பர் ஒளிகளிலும் நகரத்தின் முன்னிரவு வாழ்க்கை கொப்பளித்துக் கொண்டிருந்தது.

ஏனோ மனது முன்காலத்தில் பயணித்து வந்தால் மிகவும் நெகிழ்ந்துவிடுகிற்து. நெகிழும்போதெல்லாம் இயல்பாய் பிரார்த்தனைக்குள் நழுவுகிறது.

“இறையே! இறையே! எல்லோரும் சுகமாய், அமைதியாய் வாழ வேண்டும். பேக்கரி வைத்திருப்பவர்கள், ரோட்டோரத்தில் தள்ளுவண்டி சாப்பாட்டுக்கடை போட்டிருப்பவர்கள், அங்கு சாப்பிடுபவர்கள், இந்த பஸ்ஸில் வேலைமுடிந்து களைப்பாய் வீடு திரும்புபவர்கள்...எல்லோரும் எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும்”

வடவள்ளியிலிருந்து சிங்காநல்லூர் வந்துசேர இரண்டுமணி நேரமாகியிருந்தது.