93, ஐந்தாவது குறுக்குத்தெரு, சாரதா நகர், பார்வதிபுரம், நாகர்கோவில்
பல்லடத்தில் ட்ரெயின் முன்பதிவு செய்யும்போது, “சார், நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல சீட் இல்ல. கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ல பண்ணிரட்டுமா?” என்றார் நண்பர். கன்யாகுமரி எக்ஸ்பிரஸ், கேரளாவை ஒரு சுற்று சுற்றி ஐந்து மணிநேரம் அதிகம் எடுத்து நாகர்கோவில் செல்லும். வேறு வழியில்லை; கோடை விடுமுறைக் காலம். சரி, கேரளாவையும் பார்த்துக்கொண்டே சென்றால் ஆயிற்று; ”சரி” என்றேன். அப்போதும் திரும்புவதற்கு இடம் கிடைக்கவில்லை; ட்ராவல்ஸில் திரும்புவதற்கு முன்பதிவு செய்தார் நண்பர். முன்பதிவு செய்து வீடுவந்ததும், அரங்காவிடம் ஜெ நம்பர் வாங்கி, ஜெ-வை அழைத்தேன். மனம், நாகர்கோவில் செல்லும்போது ஜெ வீட்டிலிருக்கவேண்டுமேயென்று வேண்டிக்கொண்டிருந்தது. ஊட்டி சந்திப்பை சில நாட்கள் இடைவெளியில் தவறவிட்டிருந்தேன். அந்த தேதியில் வீட்டில்தான் இருப்பதாகவும், மாலை ஐந்துமணிக்கு வெளியில் போனாலும் போகலாம் என்பதால் அதற்குமுன் வந்துவிடுமாறும் சொன்னார். “அப்பாடா” என்றிருந்தது.
நண்பகலில் நாகர்கோவில் ஸ்டேஷனில் இறங்கி வெளியில் வந்ததும் செல்ல நாடார் வண்டியுடன் காத்திருந்தார். ஏறி, கலெக்டர் ஆபீஸ் எதிரில் சரவணபவனில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ரமேஷ் வீடுசென்று, லக்கேஜ்களை வைத்துவிட்டு, முகம் கழுவி ரெடியாகி கிளம்பி “பார்வதிபுரம் சாரதா நகர் போகலாம் செல்ல நாடார்” என்றேன். கோயம்புத்தூரின் சாலைகளைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு நாகர்கோவில் சாலைகள் மிகக் குறுகலாய் தெரிந்தன. ட்ராஃபிக் இடைஞ்சல்களும் அதிகமாயிருந்தன. செல்ல நாடாரின் தமிழ் உச்சரிப்பு படு சுவாரஸ்யமாயிருந்தது. கையில் நீலம் நாவலிருந்தது. அதில் வீட்டு நம்பருடன் முகவரி இருந்தது. சாரதா நகர் தெருக்களும் ஒரே ஒரு கார் செல்லுமளவுக்குத்தானிருந்தன. “தெரு நம்பர் என்ன சார்?” என்றார் செல்ல நாடார். அது புத்தகத்தில் இல்லை. வீட்டு நம்பரை மட்டும் வைத்து அங்குமிங்கும் குறுக்குத் தெருக்களில் சுற்றி வளைந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஜெ-வுக்குத்தான் மறுபடி ஃபோன் செய்யவேண்டி இருந்தது. “ஐந்தாவது குறுக்குத்தெரு” என்றார்.
முன்பே பரிச்சயமான பெயர் பொறித்த வீட்டு முகப்பு. இனம்புரியாத பரவசம் மனத்தில். வாசல் சென்று கேட் தொட்டதும் டோரா வரவேற்றது. உள் கேட் திறந்து சைதன்யா வெளியில் வந்தார். “ஜெ சைதன்யாவின் சிந்தனைக் குறிப்புகள்” ஞாபகம் வந்து முகத்தில் புன்னகை வந்தது. பின்னாலேயே கைலியில் ஜெ வந்தார். “வாங்க” என்று சொல்லிவிட்டு “இவங்கதான் சைதன்யா” என்று அறிமுகப்படுத்தினார். அருண்மொழி மேடமும் அஜியும் ஹாலுக்கு வந்தார்கள். “இவர் அஜிதன்” என்றார். “முன்னாலேயே சந்திச்சிருக்கேன் சார்” என்றதும் “எங்கே?” என்றார். “கோயம்புத்தூர்ல புது வாசகர் சந்திப்புல. கதகளி பார்த்துட்டு அங்க வந்திருந்தார்” என்றேன். அருண்மொழி மேடம் ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தார்கள். “நான் B.Sc. Horticulture மேடம். கோயம்புத்தூர் கேம்பஸ்ல பண்ணேன்” என்றேன். “நான் மதுரை கேம்பஸ். உங்களுக்குத் தெரியும்தானே?” என்றார்கள். “தெரியும். நீங்க M.Sc. பண்ணீங்களா மேடம்?” என்றேன். “இல்ல. எங்க பண்றது? அதுக்குள்ளதான் கல்யாணம் ஆய்டுச்சே” என்றார்கள். ஜெ சிரித்தார். 2016 கோவை புதுவாசகர் சந்திப்பில் முதல்முதலாய் ஜெ-வைச் சந்தித்தபோது இருந்த பதட்டமும், பரபரப்பும் கொஞ்சம் தணிந்திருந்தாலும், இன்னும் இயல்பாக இருக்கமுடியவில்லை. மல்லிகா லங்கா தகனம் பற்றியும், டார்த்தீனியம் பற்றியும் ஜெ-யிடம் பேசியது. டார்த்தீனியம் படித்துவிட்டு இரண்டு/மூன்று நாட்கள் பயந்துபோயிருந்ததை சொல்லியது. அந்தக்கதை வந்தபோது தனக்கு ஃபோன்செய்து சிலர் அந்தச் செடி கிடைக்குமா என்று கேட்டதாக ஜெ சொன்னார் (அடுத்தவர்கள் வீட்டில் நடுவதற்கு :)). ஜெ-யிடம் நான், ட்ரெயின் கேரளா சுற்றிவரும்போது வழியெங்கும் பேக் வாட்டர் பகுதிகளில் கண்ட அடர்த்தியான களை ஒட்டுண்ணி கொடியைப் பற்றி சொன்னேன். ”ஆம். கேரளாவின் தற்போதைய ஒரு பெரும்பிரச்சனை அது” என்றார். தென்னை மரங்களும் பெரும்பாலான பகுதிகளில் காய்ந்து கிடந்தன. லங்கா தகனத்தின் அந்த இறுதிக்காட்சியின் அற்புதமான வீரியத் தருணத்தை பகிர்ந்துகொண்டேன். வெண்முரசு இணையத்தில் தொடர முடியவில்லை என்றும் எல்லா செம்பதிப்புகளையும் வாங்கி வைத்திருப்பதாகவும் சொன்னேன். சமீபத்திய பதிப்பிற்கு, இப்போதுதான் கிழக்கிலிருந்து வந்து கையெழுத்து வாங்கிப் போனதாகச் சொன்னார். அஜியும், சைதன்யாவும் மாடிக்குச் சென்றார்கள். இயல் டோராவுடன் இருந்தாள். அருண்மொழி மேடம் டோராவை உள்ளுக்குள்ளேயே இருக்கச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. நாங்கள் கிளம்பும்வரை வெளியில் வரவில்லை. ட்ரெயின் ஒன்று வீட்டின் பின்னால் மிக அருகில் தடதடத்துப் போனது; ஹாலிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. கோவை சந்திப்பில் கேட்காமல் விட்ட கேள்விகளை இம்முறையாவது கேட்டுவிடவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் இம்முறையும் உள்ளேயே அழுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று. பேச்சு, அஜியின் பகல் தூக்கம்-இரவு விழிப்பு, நண்பர்களின் வாட்ஸ் அப் குழுமம், ஸ்வச் பாரத், திருவட்டாறு கோவில், கன்யாகுமரி, பத்மநாபபுரம், சில விஷயங்களில் பாலாவின் நிலைப்பாடு, வீரா, கிருஷ்ணன், நண்பர்கள் எல்லோர் பற்றியும் சுற்றிச் சுழன்றது. மல்லிகா, கடம்பன் படத்தில் யானை டாக்டரில் வரும் அதே காட்சியை வைத்திருக்கிறார்கள் என்று ஜெ-யிடம் சொன்னது. நான் நீலத்தில் ஜெ-யிடம் கையெழுத்து வாங்கினேன். ஜெ வீட்டிலிருந்த அத்தனை நேரமும், சோபாவில் உட்கார்ந்திருந்தாலும் கொஞ்சம் அந்தரத்தில்தான் மிதந்துகொண்டிருந்தேன். ஜெ, மாலையில் வெளியில் செல்லவேண்டுமென்று சொல்லியிருந்தது சட்டென்று ஞாபகம் வந்தது. ஜெ-யுடனும், அருண்மொழி மேடத்துடனும் போட்டோ எடுத்துக்கொண்டோம். (அஜியும், சைதன்யாவும் மாடியில் தூங்கியிருந்தார்கள்). “பாகுபலி போகணும். இங்க ரெண்டு தியேட்டர்ல போட்ருக்கான்; ரெண்டுலயும் ஆன்லைன் புக்கிங் கிடையாது” என்றார் ஜெ. விடைபெற்று கிளம்பினோம். ஜெ வாசல் கேட் வரை வந்து வழியனுப்பினார். மனது நெகிழ்ந்திருந்தது. என்றென்றைக்கும் மனதில் நிற்கப்போகும் தருணங்கள். நன்றி ஜெ சார்.