Bali

From HORTS 1993
Jump to navigation Jump to search

ஆறு இரவு,ஐந்து பகல்,அழகிய பாலி தீவில். மழைச் சாரலோடு தரை தொட்டது விமானம். இறங்கும் போதே இயற்கையோடு ஒன்றிப் போனோம். விமான நிலையத்தின் கழிப்பறை... சொல்லியே ஆகவேண்டும்...அதன் சுத்தத்திற்காக அல்ல...அங்கு வீசும் சுகந்த மணத்திற்க்காக.எங்கும் வரவேற்பறையில் நாம் பார்க்கும்... புஷ்பங்கள் அலங்கரிக்கும் மலர்க்கிண்ணம் அங்கே கழிப்பறையிலும் . வானமும் பூமியும் அருகாமையில் தொட்டுக் கொண்டு இருப்பது போல் ஓர் அற்புத உணர்வு. கடலும் அலையும் அங்கு காவியம் படைக்கிறது. கலையும் இசையுமே அங்கு வாழ்வாக தெரிகிறது. திரும்பும் திசையெல்லாம் திருக்கோவில்கள். தெய்வமும் தெய்வீகமும் நிறைந்த புனித ஸ்தலம். வழிபாடுகளும் வாழ்க்கை முறைகளும் மாறுபட்டாலும் தெளிந்த நம்பிக்கையும் சம்பிரதாயங்களே இல்லாத வழிபாடும் அனைவரையும் எளிதில் அழைத்து சென்றுவிடும் இறைவனடி.

அசையாது ஆடும் பாலி நடனம். சக் சக் சக் என்ற இசையுடன் கூடிய நாட்டிய நாடகம். கொஞ்சம் பயத்தை தரும் ஆக்ரோச சிலைவடிவம்.தெருவெங்கும் கொட்டிக் கிடக்கும் கலாச்சாரத்தோடு இணைந்த கலையார்வம். அரிசியையே திலகமாய் இட்டுக் கொள்ளும் அழகிய மங்கையர்கள். எத்தனை முறை எத்தனை உயிர்களைப் பறிகொடுத்தாலும் அச்சத்தை உணராது கடலன்னையின் மடியிலும், மலைகளின் தோளிலும், மண்ணின் மார்பிலும், எரிமலையின் கண்ணெதிரிலும் இயற்க்கையின் கரம் பிடித்து வாழப் பழகிக் கொண்ட நம் (மனித) இனத்தவர்கள். பயப்படாதவர்கள் அல்ல....பயம் அறியாதவர்கள்.

இருசக்கர வாகனங்களில் அதிகம் பறக்கும் அழகிய பெண்டிர்கள். மலைப் பாதையிலும் சர்வ சாதரணமாய் சரிக்கிக் கொண்டு வண்டியோட்டும் இளம் சிட்டுக்கள். பூக்களின் பூமியில் பூப்பூவாய் உடை அணியும் ஆடைக்கலாச்சாரம்.

உணவுக் கலாச்சாரம் மட்டும் நம்மை கொஞ்சம் தொலைவு படுத்துகிறது. உணவு தவிர்த்து அனைத்திலும் உள்ளம் பறிகொடுக்கலாம். உலகின் இன்னுமொரு அழகிய பகுதியை கண்ணுக்குள் வாங்கி நெஞ்சுக்குள் அனுபவிக்கலாம்....இது என் போன்ற மிகச் சிலருக்கு. பெரும்பாலானோர் மூன்றாவது கண்ணை ( camera) கைகளில் ஏந்தியபடி முழு அழகையும் அதற்குள் அடக்கிவிட ஆர்பரித்துக் கொண்டே திரியும் புகைப்பட மனிதர்களை புரிந்தும் புரியாதது போல் புன்னகைத்து பார்த்து கொண்டிருக்கும் இயற்கை எழில் மங்கை.

இயற்கையோடு ஒரு வாழ்க்கை....இயற்கைக்காக ஒரு வாழ்க்கை....இயற்கையே வாழ்க்கை.....இந்தோனேசியாவின் பாலி தீவு. இயற்கையன்னை பெற்று போட்ட எத்தனையோ அழகிய பிள்ளைகளில் இதுவும் ஒன்று. நாம் கண்ணில் எடுத்து நெஞ்சில் வைத்து கொஞ்ச வேண்டிய குட்டி குழந்தை....செல்ல குழந்தை பாலி.

முகமதியரின் நாடான போதும் இந்த குழந்தை மட்டும் ராமர் சீதை கதை கேட்டு முழுமையான இந்து குழந்தையாக எப்படி இப்படி வளர்ந்தது என்று வருவோரை ஆச்சரியப் படுத்துகிறது. அறிவியல் முன்னேற்றம் கணினி உலகம் என வாழ்க்கையை தொலைத்து திரியும் இந்த பூமியிலும் இயற்கையோடு இயைந்த பாரம்பரியம் மாறாத வாழ்க்கை நம்மை பரவசப்படுத்துகிறது. மர வேலைப்பாடுகள் நம்மை மயக்குகிறது. செயற்கை தனமற்ற இயற்கையை உண்மையை ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது. உலகின் நான்காவது உயர சிலையாம் கருடா விஷ்ணு சிலை....கடற்கரையிலிருந்து பார்க்கும் போது வானைத் தொட்டு விடும் கொள்ளை அழகு. புனித நீராடும் திருக் கோவிலாம் புரா தீர்த்த எம்புல் கோவில்....மதச்சார்பற்ற தியான நீராடல்...சாரல் மழையில் , மலை நோக்கி, கரம் கூப்பி , சிரம் தாழ்த்தி மதம் கடந்து,இனம் கடந்து,குலம் மறந்து, குளத்தில் ஒரு தியான நீராடல்.

நம்மூரைப் போன்று தலையில் ஓலைக் கூடைகளை சுமந்தபடி திருவிழாக்களில் பாலிப் பெண்கள்... நமக்கும் அவர்களுக்குமான ஆரம்ப கால உறவை உறுதி செய்கிறார்கள். கடலுக்குள் கோவில்,கோவிலுக்குள் கடல் நீர் என கடலும் , காடும், மலையும்,தொட்டு விடும் தூரத்தில் கடவுளை கண்ட மகிழ்ச்சியில் விண்ணுக்கு பாலம் அமைக்கின்றன. விண்ணுக்கும் மண்ணுக்கும், மலைக்கும் மடுவுக்கும் இடைவெளியே இல்லாதது போல் அவர்கள் உறவாடுவதும் நம்மை உணர வைப்பதும்....அப்பப்பா.....அலாதி உணர்வு....விலங்குகளும் பறவைகளும் கூட ஒரே இனமாக உறவாக நடத்தப்படுவதில் ஆச்சரியம் இல்லை இந்த புண்ணிய பூமியில்.... எனவே தான் இது சொர்க்க பூமி ஆனதோ.... சிலைகளும் ஓவியங்களும் நிறைந்து கிடக்கும் சிலைத்தீவு... கலைத்தீவு. எது வீடு எது கோவில் எனப் பகுத்து பார்க்க முடியாத வீட்டுக்கு வீடு கோவில். கண்ணைக் கவரும் கட்டிடக்கலை. கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கும் கடல் நீர்... பார்ப்பதற்க்கு பசுமையாக எங்கும் பச்சைபசேல்... நெஞ்சுக்கு அரணாக மலைகள்...மனதுக்கு இதமாக மழைச்சாரல்...இவை அனைத்திற்க்கும் நடுவே விழி மூடி இறையோடு உறவாட உற்ற இடம் இந்த பாலி.

அலைமகள் கடல் அலையாய்....கலைமகள் காணும் இடமெல்லாம் கலையாய்......மலைமகள் எங்கும் மலையாய்.....நில மகளோடு கைகோர்த்து ஒரே மகளாய் பாலி எனும் பெயர் கொண்டதோ..... மும்மூர்த்திகள் கூட இங்கு ஒரே மூர்த்தியாய் ஓர் உருவில் ஒரே தெய்வமாய் வணங்கப்படுவது வியப்புக்குரியது.....எண்ணிக்கைக்கு அடங்கா உருவங்களையும் அவதாரங்களையும் கொண்ட நம் இந்து சமயத்தில்.....ஓருவனே தேவன் என்ற கொள்கை தனிப்பட்ட முறையில் என் மனதை கவர்ந்தது......கடலுக்கு சொந்தகாரரான நீலமேனியனையும் (மஹா விஷ்ணு), படைத்தலின் கர்த்தாவான கலை மேனியனையும்(பிரம்மா), மலைக்கு சொந்தகாரரான அந்த ஆதிமூலனையும்(சிவன்),ஒன்றினைத்து ஆகம நியதியில் வழிபடுவதும், இப்படி இயற்கையையும் இறைவனையும் இரண்டற கலந்து நோக்குவதும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.....

இப்படி இந்த சொர்க்க பூமி பற்றி என்னால் பத்து வரிகளில் வடித்து விட முடியாது....வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சென்று ஒருசில நாட்கள் வாழ்ந்து உணருங்கள்.....இதை முன்னுரையாக எடுத்துக் கொண்டு தொடரட்டும் உங்கள் பயணம் என் வாழ்த்துக்களோடு......🙏🙏🙏.

என்றும் அன்புடன் உங்கள் கலாவதி அய்யனார்... 🙏.